கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள காமராஜர் மார்க்கெட் பகுதியில் புதிய வணிக வளாகம் கட்டும் பணியை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதேபோல், கரூர் காமராஜர் மார்க்கெட் வியாபாரிகளின் 20 ஆண்டு கோரிக்கையான புதிய வணிக வளாகம் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதனையும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையும் படியுங்கள்: என்.எல்.சி-க்கு எதிராக அன்புமணி ராமதாஸ் நடை பயணம்: தொண்டர்கள் திரளாக பங்கேற்பு
பின்னர், அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது;
கரூர் காமராஜர் மார்க்கெட் பகுதியில் ஒரு கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் புதிய வணிக வளாகங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வரும் ஜூன் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாபாரிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார். காமராஜர் மார்க்கெட் பகுதியில் வியாபாரிகளின் 20 ஆண்டுகால கோரிக்கையான வணிக வளாகம் கட்டும் பணியை நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனே செயல்படுத்தி உள்ளோம். மீன் மார்க்கெட்டுக்கு தனியாக வணிக வளாகம் கட்டுவதற்காக 1 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு பணிகள் தயாராகி வருகின்றன. அந்தப் பணிகளும் விரைவில் முடிவுக்கு வரும் என தெரிவித்தார்.
மேலும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பற்றிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் டிவிட்டர் பதிவு குறித்த கேள்விக்கு, அரசு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருப்பதால் அரசியல் குறித்து தற்போது பேச வேண்டாம் என நினைக்கிறேன் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் அருகில் இருந்தனர்.
முன்னதாக, கரூரில் அ.தி.மு.க ஐ.டி விங் நிர்வாகிகள் மீது பொய் வழக்கு புனையப்படுவதாக, அ.தி.மு.க தரப்பு குற்றம்சாட்டி வருகிறது. சமீபத்தில் கடத்தப்பட்டு தாக்குதலுக்குள்ளான அ.தி.மு.க ஐ.டி விங் நிர்வாகியை தாக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதனால், அ.தி.மு.க கரூர் மாவட்ட செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கரும், முன்னாள் அமைச்சரான ஜெயக்குமாரும் தமிழக டி.ஜி.பியை சந்தித்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு ஒன்றை அளித்தனர். அதோடு, ஜெயக்குமார், கரூர் மாவட்டத்தில் தி.மு.க அராஜகப் போக்கை கடைப்பிடித்து வருவதாகவும், 'கரூரில் கண்ட்ரோல் இல்லை' என்றும் செந்தில் பாலாஜிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தன்னைப்பற்றி செய்த விமர்சனத்துக்கு பதிலாக செந்தில் பாலாஜி தன் ட்விட்டர் பக்கத்தில், “கரூர் மாவட்டத்தில் அனைத்துத் தேர்தல்களிலும் மக்களால் புறக்கணிக்கப்படும் அ.தி.மு.க, எப்படியாவது செய்திகளில் இடம்பெற்றுவிட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஜெயக்குமார் 'கரூரில் கண்ட்ரோல் இல்லை' என பேசியிருக்கிறார். முதலமைச்சர் தளபதி அவர்களின் நல்லாட்சியில் தமிழ்நாடு முழுக்க சட்டம், ஒழுங்கு மிகச்சிறப்பாக கையாளப்பட்டு, அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. தனக்குத்தானே 'கண்ட்ரோல் இல்லாதவர்கள்' சொல்வதையெல்லாம் மக்கள் நம்புவதில்லை'' என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.