சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று (செப்.26) தீர்ப்பளித்துள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தில் வழக்குக்குப் பதிவு செய்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில், ஓராண்டுக்கு மேலாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் செந்தில் பாலாஜி தரப்பு- அமலாக்கத் துறை தரப்பு என இருதரப்பினருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இரு தரப்பிலும் வாதங்கள் முடிவடைந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அஹ்ஸனுதின் அமானுல்லா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி இன்று தீர்ப்பு வழங்கியது. இதன் மூலம் கடந்த 15 மாதங்களாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வருகிறார்.
சாட்சிகளை கலைக்க கூடாது, அமலாக்கத்துறை அலுவலகத்தில் திங்கள் வெள்ளி இரு நாட்கள் கையெழுத்திட வர வேண்டும், ரூ.25 லட்சத்திற்கு இரு நபர் உத்திரவாதம் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனை அடுத்து இன்று மாலை சென்னை புழல் சிறையில் இருந்து வெளியே வரும் செந்தில் பாலாஜி வரவேற்க தொண்டர்கள் புழல் சிறைக்கு செல்வதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு தற்போது போடப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“