தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சார்பில் வழக்கறிஞர் ராம் சங்கர் தாக்கல் செய்த ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. நீதிபதிகள் இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி அனைத்து தரப்பின் வாதங்களையும் பதிவு செய்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்கள்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. அதன்படி, செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டும், ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருப்பதாலும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்திருந்த நிலையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் நிபந்தனைகள்
இந்த தீர்ப்புக்கு பிறகு செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நிருபர்களிடம் பேசுகையில், "செந்தில் பாலாஜியின் அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 25 லட்சம் ரூபாய்க்கு இருவர் உத்திரவாதம் வழங்க வேண்டும். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை என வாரத்திற்கு 2 நாட்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தின் அனைத்து விசாரணைகளுக்கு அவர் ஒத்துழைப்பு தர வேண்டும். சாட்சிகளை கலைக்க எவ்வித முயற்சிகளிலும் ஈடுபடக் கூடாது. இன்று மாலை அல்லது நாளை காலை அவர் சிறையில் இருந்து வெளியே வருவார். அமலாக்கத்துறையின் எதிர்கருத்துக்களை நீதிபதிகள் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
அடிப்படை உரிமைகளுக்கு எதிராக யாரையும் நீண்ட நாள் சிறையில் வைத்திருக்க முடியாது என்பதை உச்சநீதிமன்றம் அழுத்தமாக தெரிவித்துள்ளது. அவர் மீண்டும் அமைச்சராவதற்கு எந்த தடையும் இல்லை." என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“