சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தொடந்த வழக்கில் நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு இன்று ஜாமீன் வழங்கி தீர்ப்பினை வழங்கியுள்ளது. இதனையடுத்து, 15 மாதங்களுக்குப் பின்னர் செந்தில் பாலாஜி பிணையில் விடுதலையாக உள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவிக்கையில், “செந்தில் பாலாஜி கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக விசாரணைக் குற்றவாளியாகவே இருந்ததால், அடிப்படை உரிமையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
வழக்கின் விசாரணைக்கு இன்னும் நீண்ட காலம் எடுக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜாமீனுக்காக செந்தில் பாலாஜிக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் இரண்டு பேர் ஜாமீன் உத்தரவாதம் வழங்க வேண்டும்.
திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சாட்சிகளைக் கலைக்கக் கூடாது, வழக்கில் வாய்தா கேட்கக் கூடாது போன்ற நிபந்தனைகள் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது” என்று கூறினார்.
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏதேனும் நிபந்தனை விதித்துள்ளதா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “அதுமாதிரியான எவ்வித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவதற்கு எத்தகைய சட்டபூர்வ தடையும் இல்லை. இந்தத் தீர்ப்பின் மூலம் அரசியலமைப்பே பிரதானமானது என்று உச்ச நீதிமன்றம் நிறுவியுள்ளது” என்று வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார்.
தி.மு.க-வினர் கொண்டாட்டம்
இதற்கிடையில், சிறையில் இருந்து 471 நாட்களுக்கு பிறகு செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வர இருப்பதால் தி.மு.க-வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனையொட்டி தமிழகம் முழுவதும் தி.மு.க-வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.
செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூர் மற்றும் பொறுப்பு அமைச்சராக இருந்த கோவையில் தி.மு.க நிர்வாகிகள் கூடுதல் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசுகள் வெடித்தும், சாலைகளில் செல்லும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தி.மு.க கொடிகளை ஏந்தியபடி பல்வேறு இடங்களிலும் அக்கட்சியினர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததை கொண்டாடி வருகிறார்கள்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.