சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜுன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் எனத் தொடர்ந்து அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில் அவருக்கு 400 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல் முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் விசாரணை முடிந்து, இன்று (செப்.26) செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை முதல்வர் ஸ்டாலின், தி.மு.க கூட்டணி கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
இதுபற்றி சென்னை அறிவாலயத்தில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறுகையில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லும் போது செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது, அவரின் டெல்லி பயணமும் மிகப்பெரிய வெற்றி பெரும் என்ற நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொடுக்கிறது.
செந்தில் பாலாஜிக்கு 15 மாத சிறை என்பது தேவையற்ற ஒன்று என நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. கொங்கு மண்டலத்தில் திமுகவின் வெற்றிக்காக பணியாற்றினார் என்பதற்காகவே சிறையில் அடைத்தார்கள். செந்தில் பாலாஜி சிறையில் இருந்தாலும், வெளியே இருந்தாலும், திமுகவின் செல்வாக்கை யாராலும் குறைக்க முடியாது.
செந்தில் பாலாஜி அமைச்சராவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை; இது தாமதிக்கப்பட்ட நீதி, வழக்கை அமலாக்கத்துறை இழுத்தடிக்க நினைத்த போதெல்லாம், நீதிமன்றம் சரியான பதில் கொடுத்துள்ளது.
அமலாக்கத்துறை தொடர்ந்த எல்லா வழக்குகளிலும், உச்ச நீதிமன்றம் குட்டு வைத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு ஜாமின் கொடுத்து இருக்கிறது" என்று கூறினார்.
தொடர்ந்து அமைச்சர் ரகுபதி கூறுகையில், "செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது மகிழ்ச்சியான விஷயம். செந்தில் பாலாஜியின் 15 மாத சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிதான் இந்த நிபந்தனை ஜாமீன்; அதனை வரவேற்கிறோம். செந்தில் பாலாஜி போல் பொறுமையோடு சட்ட போராட்டம் நடத்திய ஒருவரை பார்க்க முடியாது.
சிறையில் இருந்த போது அமைச்சர் பதவியே வேண்டாம் என்றார். அங்கிருந்தே மிகப் பெரிய சட்டப் போராட்டம் நடத்தி ஜாமீன் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது.
அமலாக்கத்துறை வழக்குகள் எக்கச்சக்கமாக உள்ளது ஆனால் எந்த வழக்கிலும் அவர்கள் வெற்றி பெற்றது கிடையாது; எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் உள்ளார்கள்? செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்குவது குறித்து கட்சி தலைமை முடிவெடிக்கும். முதலமைச்சர் அறிவிப்பார்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“