Enforcement Directorate | Chennai High Court | V Senthil Balaji: சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுவரும் நிலையில், நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே 2 முறை மனு தாக்கல் செய்தார். ஜூன் 16 மற்றும் செப்டம்பர் 20ம் தேதி அந்த மனுக்களை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தள்ளுபடி செய்தார். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் கோரி நேற்று செவ்வாய்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தாம் உடல்நலக் குறைவால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே செய்த இதய அறுவைச் சிகிச்சையில் இருந்து தாம் முழுமையாக குணமைடையாத நிலையில், திங்கள்கிழமை உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாகவும், சிறையில் இருந்து சிகிச்சை பெறுவதில் சிரமம் உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையீடு செய்தும் இருந்தார்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார். மேலும், வழக்கு விசாரணையை 16ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“