அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தணை செய்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இந்த வழக்கல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இது தொடர்பான நகலும் செந்தில் பாலாஜிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நிலையில், தற்போது 2-வது முறையாக செந்தில்பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையில் இன்று நடைபெற உள்ளது. இதனிடையே செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எல்.அல்லி முன்னிலையில் காணொலி காட்சி வாயிலான ஆஜரான செந்தில் பாலாஜிக்கு டிசம்பர் 31-ந் தேதி வரை நீதிமன்றம் காவல் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் செந்தில் பாலாஜிக்கு 17-வது முறையாக நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஏற்கனவே ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 2-வது முறையாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“