முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணையில், அமலாக்கத்துறை ஆவணங்களை திருத்தியதாக செந்தில் பாலாஜி தரப்பு குற்றம்சாட்டிய நிலையில், ஆவணங்கள் திருத்தப்படவில்லை என்று இ.டி வாதிட்டுள்ளது. இதையடுத்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 8 மாதங்களாக சிறையில் இருக்கிறார். இவருடைய ஜாமீன் மனு ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜி, இரண்டாவது முறையாக ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு பிப்ரவரி 14-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு, விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்க்றிஞர் ஆர்யமா சுந்தரம், அமலாக்கத்துறை டிஜிட்டல் ஆவணங்களை திருத்தியுள்ளது என்று வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து, வாதிட்ட அமலாக்கத்துறை, டிஜிட்டல் ஆவணங்கள் திருத்தப்பட்டதாக செந்தில் பாலாஜி தரப்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறு. செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலும் அவர் இன்னும் செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார். அவர் ஜாமீனில் வெளியே வந்தால், சாட்சிகளைக் கலைக்கூடும் என்பதால் அவருக்கு ஜாமீன் தரக்கூடது அமலாக்கத்துறை வாதிட்டது.
இதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று (21.02.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடுகையில், “செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுக்கு நேரடியாக எந்த ஆதாரமும் இல்லை. முறைகேடுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. அமலாக்கத்துறை ஆவணங்களை திருத்தியுள்ளது. நிபந்தனை விதித்தால் அதற்கு கட்டுப்படத் தயார்” என்று வாதிடப்பட்டது.
இதற்கு அமலாக்கத்துறை தரப்பில், “பெண்டிரைவில் இருந்த ஆவணங்களில் 284 கோப்புகளை முதலில் தடயவியல் துறை ஆய்வுக்கு எடுத்தது. மொத்தமாக 487 கோப்புகளை தடவியல் துறை ஆய்வுக்கு எடுத்துள்ளது. இதில் அமலாக்கத்துறை எந்த தலையீடும் செய்யவில்லை. சுமார் 2,900 பேருக்கு வேலை வாங்கி வருவதாகக் கூறி பணம் சேகரித்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. ” என்று வாதிடப்பட்டது.
மேலும், “வழக்கின் ஆதாரங்கள் அனைத்தும் மற்றொரு புலனாய்வு அமைப்பால சேகரிக்கப்பட்டவை, சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்ட ஆவணங்களில் எதையும் திருத்தவில்லை” என்று அமலாக்கத்துறை தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது ஐகோர்ட். செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுக்கு நேரடியாக எந்த ஆதாரமும் இல்லை என்று மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதம் செய்தார். செந்தில் பாலாஜி மீது 30 வழக்குகள் உள்ளதாக குறிப்பிட்டதற்கு மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் மறுப்பு தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“