அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையில், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்று அமலாக்கத்துறை வாதிட்டுள்ளது.
சட்ட விரோதப் பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை ஏற்கனவே அமலாக்கத்துறை தாக்கல் செய்து விட்டது. இந்த வழக்கில் 2 முறை ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அக்டோபர் 9ம் தேதி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி அக்டோபர் 10-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த அறிக்கையை குறிப்பிட்டு வாதங்களை முன்வைத்தார். மருத்துவ அறிக்கையில், செந்தில் பாலாஜிக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்றமே ஒரு மருத்துவரை நியமித்து அவரது உடல் நிலை குறித்து ஆய்வு செய்யலாம்.
வேலைப் பெற்று தருவதாக கூறி ரூ. 1 கோடியே 34 லட்சம் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் 10 ஆண்டுகளில் வங்கிக் கணக்குகளை தாக்கல் செய்துள்ளார். வருமான வரி கணக்குகளையும் தாக்கல் செய்துள்ளார். இதில், இருந்தே அவர் குற்றமற்றவர் என்பது நிரூபணம் ஆகிறது. எனவே, இந்த வழக்கில், அவர் உள்நோக்கத்துடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்” என்று வாதிட்டார்.
அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், “செந்தில் பாலாஜி அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் சேகரிக்கப்பட்ட தகவலின்ப்படி, வேலை பெற்று தருவதாக கூறி 67 கோடியே 75 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. மேலும், சிறை மருத்துவமனை அல்லது அரசு மருத்துவமனையில் குறிப்பிட்ட சிகிச்சைக்கான வசதி இல்லாத நிலையில் மட்டுமே ஜாமீன் வழங்க முடியும். செந்தில் பாலாஜிக்கு அதுபோன்ற நிலை ஏறபடவில்லை.
செந்தில் பாலாஜியின் கால் மரத்துப் போவது சமீபத்தில் ஏற்பட்டது அல்ல. அறுவை சிகிச்சை செய்தது முதலே அவருக்கு இந்த பிரச்சினை இருந்து வருகிறது. மருத்துவ சிகிச்சை காரணங்களுக்காக ஜாமீன் வழங்க முடியாது என ஏற்கெனவே முதன்மை அமர்வு நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. இந்த நிலையில், ஸ்டான்லி மருத்துவர்களின் அறிக்கைகளிலும் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனை சிகிச்சை அவசியம் என குறிப்பிடவில்லை. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். எனவே, இந்த நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைத்து விடுவார்” என்று வாதிட்டார்.
செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை ஆகிய இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.