அமலாக்கத்துறை 2 முறை சம்மன் அனுப்பிய நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களுக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
இதையும் படியுங்கள்: செந்தில் பாலாஜிக்கு நாளை ஆபரேஷன்: அமைச்சர் மா.சு அறிவிப்பு
அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 13 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை, கரூரில் உள்ள இல்லங்கள் மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறைகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அமைச்சரின் சகோதரர் அசோக் குமாரின் வீடு, ராயனூரில் உள்ள கொங்கு மெஸ் உரிமையாளர் மணி என்பவரிடம் வீடு உட்பட 8 இடங்களில் சோதனை நடந்தது.
அமலாக்கத்துறை சோதனைக்கு பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதற்கு கால அவகாசம் கேட்டு அவரது தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, அசோக் குமாரை நேரில் ஆஜராகுமாறு 2 ஆவது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் இந்த முறையும் ஆஜராகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அசோக் குமார் தரப்பில் நேரில் ஆஜராக கால அவகாசம் கோரியுள்ளதாக கூறப்படுகிறது. தன்னிடம் கேட்ட ஆவணங்களைத் திரட்டி வருவதால் தன்னால் ஆஜராக முடியவில்லை என்று அசோக் குமார் தனது வழக்கறிஞர் மூலம் அமலாக்கத்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil