அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்த மறுநாளில் பல ஆவணங்களை தீ வைத்ததாக வெளியான வீடியோ, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தது. தொடர்ந்து அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை பல கட்டங்களாக சோதனை மேற்கொண்டு ஆவணங்களை கைப்பற்றியது.
இந்த வழக்கு தொடர்பாக குற்றப் பத்திரிக்கை ஆகஸ்ட் 12 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பிறகும், சென்னை, கோவை, கரூர் நாமக்கல் ஆகிய ஊர்களில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மறுபடியும் சோதனைகளை நடத்தினர்.
/indian-express-tamil/media/media_files/1e4Hz2DaCMD1je5zFMC9.jpeg)
இதில் ஆவணங்கள் அழிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் வந்துள்ளது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட மறுநாளில் கோவை மேயர் கல்பனாவின் தம்பி வசிக்கும் கோவை மணியகாரம்பாளையம் வீட்டுக்கு அருகில், சில காகித ஆவணங்களை குமார் தீ வைத்து எரித்ததாக தற்போது வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
அதில் எரிக்கப்படாத சில காகிதங்களில் பணப்பரிவர்த்தனை நடந்ததற்கான வார்த்தைகளும் உள்ளன. அதில் 66 லட்சத்து 50 ஆயிரம் மட்டும், என்று குறிப்பிட்டு அந்த தொகைக்கு காசோலை கொடுக்கப்பட்ட விபரமும் இடம்பெற்றுள்ளது.
அமைச்சர் கைதான அடுத்த நாட்களில் இந்த எரிப்பு சம்பவம் நடந்திருப்பதாக கூறப்படும் நிலையில், இது குறித்து கோவை மேயர் கல்பனாவின் தம்பி குமாரிடம் தொடர்பு கொண்டு கேட்கும் போது, அது தவறான தகவல், குப்பையை மட்டுமே எரித்தேன்… தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றது, இது குறித்து சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“