சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டதின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஆகஸ்ட் 14ம் தேதி மாற்றப்பட்டது.
இதையடுத்து வழக்கில் ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்த நிலையில் அதனை விசாரிப்பதில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றம் இடையே தெளிவில்லாத சூழல் நிலவியது. பின்னர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை, எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து, முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
அதையடுத்து ஜாமின் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்தார். இதையடுத்து ஜாமின் மனு மீதான விசாரணை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருதி ஜாமின் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அமலாக்கத்துறையினர் விடுத்த கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“