அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை என்று அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் குழு பரிந்துரையின்படி, செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
செந்தில் பாலாஜி கைதான பிறகு, அவருடைய மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்டது. இதை எதிர்த்து அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் முடிவுக்கு விட்டுவிடுவதாக தெரிவித்தது. செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு அமலாக்கத்துறையை எதிர்த்து வாதிடப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் துஷார் மேத்தா ஆஜரானார். செந்தில் பாலாஜி தரப்பில் தி.மு.க எம்.பி-யும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ ஆஜரானார்.
கடந்த வாரம் இந்த வழக்கில், அமலாக்கத்துறை மற்றும் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீண்டும் இன்று (ஜூன் 27) விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் ஆஜரான வக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, செந்தில் பாலாஜி கைது குறித்து அவருடைய குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்ததாக அமலாக்கத்துறை பதில் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததற்கு ஆட்சேபம் தெரிவித்தார். மேலும், ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்ட உடனேயே, அதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்படவில்லை என்பதால், செந்தில் பாலாஜி கைது சட்ட விரோதமானது என்று வாதிட்டார்.
இதை கருத்தில் கொள்ளாமலேயே நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டிருப்பதாக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ கூறினார்.
மேலும், அமலாக்கத்துறையை காவல்துறையினராக கருத முடியாது என்பதால், அமைச்சரை காவலில் எடுக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்துள்ளதால், செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை என்பது நிரூபணம் ஆவதாகக் கூறினார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டப்படி, ஆதாரங்கள் இருந்தால் கைது செய்யலாம் என்றும் கைது செய்யும் போது அதற்கான காரணங்களை கூற வேண்டியதில்லை என்றும், கைதுக்கு பின்னர் காரணத்தை கூறலாம் என்றும் வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிட்டார்.
செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் தான் இருக்கிறார். அமலாக்கத் துறை காவலில் இல்லை என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார்.
அதனால், அவரை ஆஜர்படுத்தி, விடுவிக்கும்படி கோர முடியாது என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். நீதிமன்ற காவலில் வைக்க ஆஜர்படுத்தும் போது, அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோர அமலாக்கத் துறைக்கு உரிமை உள்ளது. ஒருவர் நீதிமன்ற காவலில் இருக்கும் போது ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று அமலாக்கத்துறை தரப்பில் வாதங்களை முன்வைத்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாக கூறி, அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டது. மேலும், அமலாக்கத்துறை மற்றும் செந்தில் பாலாஜி தரப்பு தங்கள் வாதத்தை எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்ய நிதிபதிகள் உத்தரவிட்டனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"