V Senthil balaj | Enforcement Directorate: சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்த அமலாக்கத்துறை விசாரணைப் பிறகு ஆகஸ்ட் 12ம் தேதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் அவருக்கு 19 முறை நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்.
ராஜினாமா
செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளபோதும் அமைச்சராக நீடித்து வந்தார். அவருக்கு எந்த இலக்காக்களும் ஒதுக்கப்படாமல் இலாக்கா இல்லாத அமைச்சராக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், 8 மாதங்களாக சிறையில் இருந்து வரும் சூழலில் தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் திங்கள்கிழமை ராஜினாமா செய்தார். இது தொடர்பான ராஜினாமா கடிதத்தை முதலமைச்சருக்கு செந்தில் பாலாஜி அனுப்பி இருந்தார். இதையடுத்து ராஜினாமா கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு முதலமைச்சர் அனுப்பிவைத்தார். இதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கினார்.
மனு தாக்கல்
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இதனிடையே, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விசாரணை முடியும் வரை ஜாமீன் வழங்க வேண்டும் என்ற அவரது மனுவை ஏற்காமல், விரைவான விசாரணைக்கு உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளது.
செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், "ஆவணங்களை திருத்தியதாக செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டு தவறு. செந்தில் பாலாஜிக்கு எதிரான பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை துவங்க தயாராக இருக்கிறோம். செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்.
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாகத்தான் உள்ளார். செல்வாக்கு மிக்கவரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை அச்சுறுத்தக் கூடும். நீண்ட காலமாக சிறையில் உள்ளதாக கூறும் செந்தில் பாலாஜிதான், விசாரணையை தொடங்க விடாமல் தாமதப்படுத்துகிறார். ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாளை மீண்டும் விசாரணை
இந்த நிலையில், அமலாக்கத்துறையின் வாதங்களை கேட்க, செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணை நாளை (பிப்.15,2024) பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“