செந்தில் பாலாஜி மனைவி மேகலா உச்ச நீதிமன்றத்த்தில் மேல்முறையீடு செய்த வழக்கில், அமலாக்கத்துறை சுங்க அதிகாரிகள் போல கைது செய்யலாம், ஆனால் காவலில் எடுத்து விசாரிக்கும் அதிகாரம் இல்லை என்று வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாகக் காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து, இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் விசாரிப்பார் என உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி. கார்த்திகேயன் அளித்த தீர்ப்பில், “இரண்டு நீதிபதிகள் அமர்வில் பரத சக்கரவர்த்தி கூறிய கருத்துடன் உடன்படுகிறேன். செந்தில் பாலாஜியை எப்போது காவலில் எடுக்கலாம் என்பது குறித்து ஏற்கனவே விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு மீண்டும் விசாரிக்கும். எனவே, செந்தில் பாலாஜி வழக்கின் இறுதித் தீர்ப்பை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கும்” எனத் தெரிவித்தார்.
மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது; நீதிமன்ற காவல் சட்டப்படியானது; ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல. சிகிச்சையில் இருந்த காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது என்றும் சிகிச்சை முடிந்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று மூன்றாவது நீதிபதி தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா மேல்முறையீடு செய்திருந்தார்.
இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கட்டும் என நீதிபதி நிஷா பானு தெரிவித்தார். நீதிபதிகள் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கையில் எடுத்த பின் நாங்கள் ஏன் நிலுவையில் வைத்திருக்க வேண்டும். அனைத்து அம்சங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும்போது இந்த வழக்கை முடித்து வைக்கலாமே என்று இந்த வழக்கை முடித்து வைத்தனர்.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வு விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு புதன்கிழமை மதியம் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
இதையடுத்து, செந்தில் பாலாஜியின் வழக்கு விசாரணை வியாழக்கிழமை பிற்பகல் உச்ச நீதிமன்றத்தில் 2வது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.
உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் வாதங்களை முன்வைத்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “அமலாக்கத்துறையினருக்கு சுங்க அதிகாரிகள் போல விசாரணை நடத்தி கைது செய்யும் அதிகாரம் உள்ளது. ஆனால், காவலில் எடுத்து விசாரிக்கும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இல்லை.” என்று வாதிட்டார்.
தொடர்ந்து தனது வாதங்களை முன்வைத்த கபில் சிபல், “காவல் துறைக்கும், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் உள்ள வேறுபாடுகளை விஜய் மதன்லால் உத்தரவு தெளிவுபடுத்தியுள்ளது. அமலாக்கத்துறையினரைப் போலீஸ் அதிகாரிகளாகக் கருதினால் அனைத்து அதிகாரங்களும் அவர்களுக்கும் இருக்கும். எனவே, போலீசாருக்கு உள்ள அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இருந்தால் அது பி.எம்.எல்.ஏ. சட்ட விதிகளுக்குப் புறம்பானது” என வாதிட்டார்.
தீபக் மகாஜன் வழக்கை மேற்கோள் காட்டிய செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், “தீபக் மகாஜன் வழக்கில், ஒரு நபர் கைது செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவர் ஒரு 'நபர்' என்று குறிப்பிடப்பட்டார் 'குற்றம் சாட்டப்பட்டவர்' என்று இல்லை. அவரை நீதிமன்றக் காவலுக்கு கூட அனுப்ப முடியவில்லை. இப்போது இங்கு பிரச்னை, செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் அனுப்ப முடியுமா என்பதுதான். எனது கற்றறிந்த நண்பர் (சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா) தீபக் மகாஜனைப் பற்றிப் பூசி மெழுகினார். மூன்றாவது நீதிபதி கூட தீபக் மகாஜனைப் பற்றி பேசவில்லை. நாங்கள் சொல்வது, சட்டப்படி நீதிமன்றக் காவலுக்கு மட்டுமே பொருந்தும். அமலாக்கத்துறையினர் நீதிமன்ற காவல் மட்டுமே கோர முடியும். அப்போது குறுக்கிட்ட நீதிபதி சுந்தரேஷ், கைது செய்வதை தண்டனையாக கருத முடியாது. சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இருக்கிறது. கைது செய்யப்படுவது விசாரணை நோக்கத்திற்காகத்தான். அதிகமான தரவுகளை பெறவே ஒருவரை விசாரணை முகமைகள் கைது செய்கின்றன என கருத்து தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து வாதாடிய கபில் சிபல், “என் கவலை என்ன என்றால், இந்தச் சட்டம் போதுமான அளவு பயன்படுத்தப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. நான் என்னுடைய தரப்புக்காக நிற்கிறேன், அவர் தோல்வியடையலாம் அல்லது வெல்லலாம். அது வேறு கதை..” என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “அரசியல் ரீதியாக வாதங்களை வைக்காமல், உண்மைகள் மற்றும் சட்டங்களுக்குள் நாம் செல்வோம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து, மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 1-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைத்தது. மேலும், ஆகஸ்ட் 1-ம் தேதி மதியம் 1 மணி நேரத்தில் வாதங்களை நிறைவு செய்ய செந்தில் பாலாஜி தரப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.