செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்க முடியுமா என ஆராய்ந்து பதிலளிக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் எத்தனை அமைச்சர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன என்ற விவரங்களை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, பணம் வாங்கிகொண்டு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.
பலமுறை ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 26-ம் தேதி ஜாமீன் வழங்கியது. சிறையிலிருந்து வெளியே வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, நேற்று (செப்டம்பர் 29) மீண்டும் அமைச்சரானார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்க தனியாக அமர்வு நீதிபதியை நியமிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா முன்னிலையில் இன்று (செப்டம்பர் 30) விசாரணைக்கு வந்தது. போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கிக்கொண்டு மோசடி செய்ததாக தொடர்ந்த வழக்கை ஓராண்டுக்குள் நிறைவு செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது, புகார்தாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை என்ற அடிப்படையில்தான் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், இப்போது அவர் மீண்டும் அமைச்சராகி உள்ளதால் அவருடைய ஜாமீனைப் பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு, செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட மறுபரிசீலனை செய்யக் கோரி ஒரு மனுவைத் தாக்கல் செய்யுமாறு கூறிய நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா உத்தரவிட்டார்.
மேலும், “சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான 29 வழக்குகளைத் தற்போதைய அமர்வு நீதிபதி கையாள்கிறார். இதில், 20 வழக்குகள் விசாரணை நிலையில் உள்ளன. சில வழக்குகளில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை. மொத்தமாக 2,000-க்கும் மேற்பட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களும், 600 அரசு தரப்பு சாட்சிகளும் உள்ளன. குற்றப்பத்திரிகையிலுள்ள குற்றச்சாட்டுகளைப் பார்க்கும்போது, இந்த வழக்குகளை முன்கூட்டியே முடிக்க வேண்டும்.
எனவே, சிறப்பு எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்குகளை விசாரிக்க மேலும் ஒரு அமர்வு நீதிபதியை சென்னை உயர் நீதிமன்றம் நியமிப்பது பொருத்தமானதாக இருக்கும். குறிப்பாக, எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான வழக்குகளைக் கையாளும் தற்போதைய அமர்வு நீதிபதி பணிச்சுமை காரணமாக, செந்தில் பாலாஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான விசாரணையை விசாரிக்க மற்றொரு அமர்வு நீதிபதியை நியமிக்க வேண்டும்” கூறியுள்ளது.
செந்தில் பாலாஜி வழக்குடன் 23 வழக்குகளை விசாரித்து வருவதாக நீதிபதி அறிக்கை அளித்துள்ளார் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அடுத்த விசாரணைக்குள் அளிக்க வேண்டும் என்றும் விசாரணையை அக்டோபர் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“