முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்குகளை ஒராண்டுக்குள் நிறைவு செய்ய உத்தரவிடக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், விசாரணை அறிக்கையை, உயர்நீதிமன்ற பதிவாளர் வாயிலாக, எம்.பி, எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு ராசு போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி கொடுப்பதாக லஞ்சம் வாங்கிக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பண மோசடி வழக்கில் குற்ற வழக்கு பதிய ஆளுநர் ஆர்.என். ரவி அனுமதி அளித்த நிலையில் வழக்கு பதியப்பட்டது.
இந்நிலையில், இந்த ஊழல் மோசடியால் பாதிக்கப்பட்ட பாலாஜி என்பவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்குகளை ஓராண்டுக்குள் நிறைவு செய்ய உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும் வகையில் அரசு தரப்பு சிறப்பு வழக்குறிஞரை நியமிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (செப்டம்பர் 2) விசாரணைக்கு வந்தது. அப்போது "செந்தில் பாலாஜி ஊழல் மோசடி தொடர்பான வழக்கு விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்ற பதிவாளர் வாயிலாக எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் சிறப்பு நீதிமன்றம் நீதிபதி சமர்ப்பிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், சிறப்பு நீதிமன்ற நீதிபதி அளிக்கும் நிலவர அறிக்கை செப்டம்பர் 30-ம்தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அஜராகும் வகையில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை செப்டம்பர் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“