அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
மேலும், செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க இடைக்கால தடைகோரி அமலாக்கத்துறை மனு மீதான மீதும் உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் பரிந்துரையின்படி ஜூன் 21-ம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த வாரம் பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை இயக்குனரகத்தால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே மருத்துவர்கள் அவருக்கு இதயத்தில் 4 அடைப்புகள் இருப்பதாகவும் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தனர். பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் தனியார் விடுதிக்கு மாற்றப்பட்டார்.
செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்டது. மேலும், ஆட்கொணர்வு மனுவிற்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை ஜூன் 22-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
இதனிடையே, செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
செந்தில் பாலாஜியின் மனைவி, இந்த வழக்கில் தனது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என கோரி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் சூரியகாந்த் மற்றும் சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஜூன் 21-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை சார்பில், ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பிறகு ஆட்கொணர்வு மனுவை எப்படி தாக்கல் செய்ய முடியும்? ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து இருக்கக் கூடாது என வாதிட்டார்.
மருத்துவர்கள் குழு, செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் 4 அடைப்புகள் இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இதய அடைப்பை இ.டி நடிப்பு என்பதா என்று செந்தில் பாலாஜி தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
ஆனால், ஆட்கொணர்வு மனு மீது உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது சரியானது என தெரிவித்த உச்ச நீதிமன்றம், உத்தரவில் சந்தேகப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை என்று கருத்து தெரிவித்தது.
செந்தில் பாலாஜி வழக்கை உயர் நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து வருவதால் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடுவது குறித்து நாளை முடிவெடுப்போம் எனவும், உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதால் மருத்துவக் குழு அமைத்து செந்தில் பாலாஜி உடல்நிலை எப்படி உள்ளது என்பதை அறியலாம் எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
உயர்நீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டுதான் முடிவு எடுத்ததாக கருதுகிறோம் என்றும் தற்போதைய நிலையில், உயர்நீதிமன்றம் விசாரணையை தொடர்வது தான் சரியாக இருக்கும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், ஒருவர் மருத்துவமனையில் இருக்கும்போது அவரை காவலில் எடுக்க முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் புதன்கிழமை மறுத்துள்ளது. மேலும், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜூலை 4-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவில் உடனே தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளதால் இது அமலாக்கத்துறைக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"