v-senthil-balaji: சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, தற்போது புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான வழக்குகளை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மாற்றியது.
இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 13ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதனால், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 7-வது முறையாக நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கு தொடர்பாக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். செந்தில் பாலாஜி மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த 3 வழக்குகளிலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றப்பத்திரிக்கையில் 2,200 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த குற்றப்பத்திரிக்கையை வருகிற அக்டோபர் 5ம் தேதி வாங்கிக் கொள்ளுமாறு செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“