கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற சீட் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தன்னை திமுகவினர் வெளியே போகச் சொன்னதாகக் குற்றம்சாட்டி கொந்தளித்தார். ஆனால், அமைச்சர் செந்தில்பாலாஜி இந்த குற்றச்சாட்டை மறுத்ததோடு, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியை யாரும் அவமதிக்கவில்லை என்று கூறினார்.
தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதனால், ஆளும் திமுக, தங்கள் கூட்டணி கட்சியினருடன், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளை பங்கீடு செய்வது குறித்து தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இடங்கள் பங்கீடு குறித்து திமுக மாவட்ட செயலாளர்கள், உயர் மட்ட பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இடங்கள் பங்கீடு பேச்சு வார்த்தை கரூர் திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தபோது, அதில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, திமுகவினர் தன்னை வெளியேற சொன்னதாக குற்றச்சாட்டு தெரிவித்து கொந்தளித்தார். இதனால், கரூரில் திமுக-காங்கிரஸ் இடையேயான சீட் பங்கீடு பேச்சுவார்த்தையில் திங்கள்கிழமை சலசலப்பு ஏற்பட்டது.
திமுக அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த அவர், ‘உங்க ஆபிசுக்கு வந்து இருக்கேன். எப்படி நீங்க வெளிய போ அப்படினு சொல்லலாம். விருந்துக்கா வந்துருக்கேன்.மரியாதை இல்லாம பேசுறீங்க. நான் என்ன இவங்க வீட்டுக்கா வந்து இருக்கேன். வெளியே போன்னு சொல்றதுக்கு’ என்று கொந்தளித்தார்.
திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரும் மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில்பாலாஜியின் சொந்த ஊரான கரூரில் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இந்த சலசலப்பு திங்கள்கிழமை மதியம் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் திருப்தி அடையாததால், திமுக நிர்வாகிகளுக்கும், ஜோதிமணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஜோதிமணி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அவரை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், ஜோதிமணி தொடர்ந்து வாதிட்டதால், அரவக்குறிச்சி திமுக ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.மணியன் குறுக்கிட்டு, ஜோதிமணியை தேவையில்லாமல் பேச வேண்டாம் என்றும், தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால், மண்டபத்தை விட்டு வெளியே செல்லுங்கள் என்று கூறினார். இதனால், ஆத்திரமடைந்த காங்கிரஸ் எம்.பி தன்னை மண்டபத்தைவிட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டதாகக் கூறி உடனடியாக மண்டபத்தை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியின் இந்த குற்றச்சாட்டை மறுத்ததோடு, அவரை யாரும் அவமதிக்கவில்லை என்று கூறினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “இந்த விவகாரத்தை எங்கள் கட்சி மேலிடத்துக்கு தெரிவித்ததையடுத்து, எங்கள் கட்சி மேலிடம் மாநில காங்கிரஸ் தலைமையிடம் பேசியது. இதையடுத்து, இந்த பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டது” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.