Advertisment

அண்ணாமலைக்கு புரிதல் இல்லை: முறைகேடு புகார்களுக்கு செந்தில் பாலாஜி பதில்

தமிழ்நாடு அரசு பி.ஜி.ஆர் நிறுவனத்திற்கு முறைகேடாக ஒப்பந்தம் வழங்கியதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆட்சியாளர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை தற்போது கேட்டுள்ளார் என்றும் அண்ணாமலைக்கு புரிதல் இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
தொண்டனை மிரட்ட வேண்டாம்; என் மீது செந்தில் பாலாஜி கைவைத்துப் பார்க்கட்டும்: அண்ணாமலை சவால்

தமிழ்நாடு பி.ஜி.ஆர் நிறுவனத்திற்கு முறைகேடாக ஒப்பந்தம் வழங்கி இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்த நிலையில், இதற்கு பதில் அளித்துள்ள செந்தில் பாலாஜி, கடந்த ஆட்சியாளர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை தற்போது கேட்டுள்ளார் என்றும் அண்ணாமலைக்கு புரிதல் இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.

Advertisment

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, மின்வாரியத்தின் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு மின்வாரியம் முறைகேடாக தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டினார். இது குறித்து அண்ணாமலை ஊடகங்களிடம் கூறுகையில், “டிசம்பர் 2021 காலாண்டுக்கான வங்கி அறிக்கையைக் கொடுத்து, வங்கி உத்தரவாதம் கொடுக்க முடியாத ஒரு நிறுவனம், 400 கோடி ரூபாய் நட்டத்தில் இருக்கிற ஒரு நிறுவனம், எப்படி 400 கோடி ரூபாய் வங்கி உத்தரவாதம் கொடுத்தார்கள் என்பதை நமக்கு டேன்ஜெட்கோ (மின்சார வாரியம்) பதில் சொல்ல வேண்டும். வங்கியில் வெறும் 38 கோடி ரூபாய் நிதி வைத்திருந்த ஒரு நிறுவனம், எப்படி 8 மாதத்தில் 440 கோடி ரூபாய் பணத்தை வங்கியில் உத்தரவாதமாகக் கொடுத்து இந்த ஒப்பந்தத்தை வாங்கினார்கள். கோபாலபுரத்துக்கும் பி.ஜி.ஆருக்கும் நேரடியாக சம்பந்தம் இருக்கிறது. நேரடியாக சம்பந்தம் இல்லையென்றால், டேன்ஜெட்கோ நிறுவனம் நீதிமன்றத்துக்கு சென்று அவர்களே ரத்து செய்த ஒரு ஆர்டரை, திமுக எம்.பி வில்சன் வந்து ஆஜரான பிறகு, திமுக ஆட்சிக்கு வந்த பின்பு, பத்துமாசம் கழித்து பி.ஜி.ஆருக்கு 4,400 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளார்கள் என்றால், இந்த நிறுவனம் எப்படி திடீரென உத்தமமான நிறுவனம் ஆனது” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

மின்வாரியத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “முறையான அனுமதி அவர்களுக்கு கிடைக்காமல் அதற்கான பணிகளை தொடங்க முடியாத சூழலில், மீண்டும் அந்த அனுமதியை பெற்ற பிறகு பணிகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பொருத்தவரை, டெபாசிட் 10 சதவீதமாக இருந்ததை குறைத்து தமிழக அரசின் மின்சார வாரியம் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சலுகை காட்டியதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்.

எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டம் குறித்து அண்ணாமலைக்கு புரிதலில்லை. அரசுக்கு அவப்பெயர் உண்டாகும் வகையில் விமர்சித்து உள்ளார்.

2006ல் துவக்கப்பட்ட திட்டம் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. அதிமுக ஆட்சியில் டெபாசிட் தொகை 10 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டதால்தான் பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

2020ல் மின்திட்டங்களுக்கு வைப்பு தொகை 3% என மாநிலங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. 2019-ல் போடப்பட்ட திட்ட மதிப்பீட்டின்படியே தற்போது ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது.

வைப்புத் தொகை 5 விழுக்காடுக்கு மிகாமல் வைப்புத் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் அப்போது இருந்த அதிமுக அரசின் மின்வாரியம் 10 விழுக்காடு என்று நிர்ணயித்த வைப்புத் தொகை பிரச்னையால், இந்த 2 ஆண்டு கால இழுத்தடிப்பு செய்யப்பட்டுள்ளன. அதன்பிறகு, அவர்கள் 5 விழுக்காடு என்ற நிலையை எட்டியபோது, ஒன்றிய அரசினுடைய சுற்றறிக்கையின் அடிப்படையில், 3 விழுக்காடு எங்களுக்கு நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற அவர்களுடைய கோரிக்கையாக இருந்தது. அதுவும் நீதிமன்றத்தில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கின் அடிப்படையில், வாரியக் கூட்டத்தில் தீர்மாணிக்கப்பட்டு அதற்கான, பணிகள்தான் இப்போது முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

ஏனென்றால், இந்த பி.ஜி.ஆர் நிறுவனத்தைப் பொறுத்தவரை, கோபாலபுரத்தின் பணம் அதில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்று அண்ணாமலை ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார். அவருக்கு 24 மணி நேரம் கால அவகாசம் வழங்குகிறோம். எந்த வகையில் இந்த குற்றச்சாட்டுகளை அவர் சுமத்தினார், எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுகளைச் சொன்னார். எங்கே இருந்து இது போன்ற பரிவர்த்தனைகள் நடந்தது என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால், என் துறையின் சார்பாக அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Bjp Dmk V Senthil Balaji Annamalai Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment