சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த 14-ம் தேதி அதிகாலை கைது செய்தனர். விசாரணைக்கு அழைத்து செல்லும் வகையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு இதய அறுவை சிகிக்சை செய்யப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். அவரிடம் இருந்த மின்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை, அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், முத்துசாமிக்கும் வழங்கப்பட்டன.
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர் ஆர்.என். ரவி விசாரணையை எதிர்கொள்பவர் அமைச்சரவையில் நீடிக்க முடியாது எனக் கூறி செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சில மணி நேரங்களில் அந்த அறிவிப்பை திரும்ப பெற்றார். இதுதொடர்பாக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலிடம் கருத்து கேட்க இருக்கிறேன். எனவே, என்னிடம் இருந்து அடுத்த தகவல் வரும் வரை பதவி நீக்க உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது’ என்று அறிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் இவ்விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று கூறினார். இந்நிலையில், செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பான நீண்ட கடிதத்தை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணிக்கு ஆளுநர் ஆர். என். ரவி அனுப்பியுள்ளார். இதற்கு ஓரிரு நாளில் அட்டர்னி ஜெனரல் பதில் அளிப்பார் என்று கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“