போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி முறைகேடு செய்ததாக மத்திய குற்றபிரிவு காவல்துறையினர் பதிவு செய்த வழக்கில் முன்ஜாமீன் கோரி திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
கடந்த 2011 முதல் 2015-ம் ஆண்டு வரை தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி வருவதாகக் கூறி 2 கோடியே 80 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில், அருண்குமார் என்பவர் அளித்த புகாரில் செந்தில் பாலாஜி ஏற்கெனவே முன்ஜாமீன் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் இன்று சென்னை, கரூரில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்ட மத்திய குற்றபிரிவு காவல் துறையினர், அவரின் மந்தைவெளி இல்லத்திற்கு சீல் வைத்தனர்.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜி கைதாகக் கூடும் என்பதால் அவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், இந்த வழக்கு தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் தன்னுடைய பெயர் இல்லை என்றும் அரசியல் விரோதம் காரணமாக தன் மீது பொய்யாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, 2017-ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும்
கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து தனக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்ட காவல்துறையினர் அடுத்தகட்டமாக தன்னை கைது செய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோரி செந்தில் பாலாஜி தரப்பில் நீதிபதி சேஷசாயி முன் முறையிடப்பட்டது.
இதனை ஏற்று கொண்ட நீதிபதி, முன்ஜாமீன் வழக்கை பிப்ரவரி 3ம்ம் தேதி அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்தார்.