ஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி, வைரலாகும் புகைப்படம்... 'வாய்ப்பே இல்லை' என தங்க தமிழ்ச்செல்வன் மறுப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி இருக்கும் புகைப்படம் இன்று வைரலாகி வருகிறது

“செந்தில் பாலாஜி தி.மு.க-வில் சேர வாய்ப்பு இல்லை. உள்நோக்கத்தோடு உளவுத்துறை மூலம் இதுபோன்ற செய்திகள் பரபரப்பாக்கப்படுகிறது” என அ.ம.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

மதுரை மத்திய சிறையிலுள்ள சிவகங்கை மாவட்டச் செயலாளர் உமாதேவனை சந்தித்துவிட்டு வந்த தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “காழ்ப்புஉணர்ச்சி காரணமாக அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக, சிவகங்கை மாவட்ட செயலாளர் உமாதேவன் கைதுசெய்யப்பட்டு, தமிழக அரசால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஊடகங்களில் செந்தில்பாலாஜி பற்றி தலைப்புச் செய்தியாக்குவதில் எந்த அர்த்தமுமில்லை. செந்தில் பாலாஜி தி.மு.க-வில் சேர வாய்ப்பு இல்லை. உள்நோக்கத்தோடு உளவுத்துறை மூலம் இதுபோன்ற செய்திகள் பரபரப்பாக்கப்படுகிறது. காலியாக உள்ள தொகுதிகளில் தேர்தல் நடத்தாமல் இருக்க, தமிழக அரசு முயல்கிறது. தேர்தலில் போட்டியிடும்போது, எங்களது வேட்பு மனுக்களைத் தள்ளுபடிசெய்ய தமிழக அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தலாம்.

காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் வெற்றிப் பெற்றிருந்தாலும், மிசோரத்திலும் தெலங்கானாவிலும் தோல்வி அடைந்திருக்கிறது. ஆளும் கட்சியின் மேல் அவநம்பிக்கை கொண்டு மாற்று அரசைத் தேர்ந்தெடுத்திருப்பதாக நினைக்கிறேன். தேர்தல் நேரத்தில் எங்கள் கூட்டணி பற்றி அறிவிப்போம். தமிழ்நாட்டில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி ஜெயிக்கக் கூடாது என்பதற்காக அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பதற்காக பி.ஜே.பி பலப்படுத்த முயல்கிறது” என்றார்.

முன்னதாக, தி.மு.க முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலானது. சமூக தளங்களில் தற்போது அந்த புகைப்படம் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அது பழைய படம் என்று தெரியாமல், பலரும் அதனை ஷேர் செய்து, செந்தில் பாலாஜி திமுகவில் இணையப் போவதாக தகவல் பரப்பி வருகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close