செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில், 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சி.வி.கார்த்திகேயன் இன்று (ஜூலை 6) விசாரணை செய்கிறார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். தனது கணவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் சட்ட விரோதமாக கைது செய்துள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்கக் கோரியும் செந்தில் பாலாஜியின் மனைவி எஸ்.மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்து இருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று (ஜூலை 4) நீதிபதி ஜெ.நிஷாபானு சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து நேரடியாகவும், நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இருந்து காணொலி வாயிலாகவும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
முதலில் தனது தீர்ப்பை வாசித்த நீதிபதி ஜெ.நிஷாபானு, ‘‘அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது சட்டவிரோதம் என்பதால், ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு ஏற்கிறேன். எனவே, செந்தில் பாலாஜியை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். ஆனால் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி தனது தீர்ப்பில், “அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் கிடையாது. எனவே, இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் தள்ளுபடி செய்கிறேன்” என்று தெரிவித்தார்.
இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு அளித்த நிலையில், மூன்றாவது நீதிபதியை நியமிக்க, இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இந்த நிலையில், 3வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயனை நியமித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
இதனிடையே செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை நாளை பட்டியலிடுமாறு நீதிபத சி.வி. கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று மதியம் நடைபெற்ற நிலையில், ஏற்கனவே இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிள்ளதால், இதில் இருவரும் தீர்ப்பில் எந்த இடத்தில் மாறுபடுகிறார்கள் என்பது குறித்து தொகுத்து வைத்திருப்பதாகவுமு் அதை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறிய அமலாக்கத்துறை இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி இந்த வழக்கை நாளை பட்டியலிடுமாறு உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை வரும் சனிக்கிழமை (ஜூலை 8) நடைபெறும் என்றும், இரு நீதிபதிகளும் தங்கள் தீர்ப்பின் எந்த இடத்தில் மாறுபடுகிறார்கள் என்பது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil