’செந்தில் பாலஜியின் பெயரை சொல்லி அழைத்தபோது கூட பதில் கூறவில்லை, சுயநினைவு இல்லாமல் இருந்தார்’ என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாக, ஏமாற்றியதாக வழக்குத் தொடரப்பட்டது, இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் நேற்று, சென்னையில் உள்ள அவரது வீடு மற்றும் கரூரில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனை தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறைவரை சென்றது. மேலும் துணை ராணுவத்தினர் அவரது வீட்டில் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் செந்தில் பாலாஜி நள்ளிரவில், கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் நெஞ்சு வலியால் கதறி அழுதார். மருத்துவ உதவியை கேட்டார். பின்பு அவர் ஓமந்தூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல் நிலை தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
அவர் கூறியதாவது: ”நான் சென்று பார்த்தபோது மயங்கிய நிலையில் இருந்தார். பெயரை சொல்லி அழைத்தபோதுகூட சுயநினைவில்லாமல் காணப்பட்டார். தொடர்ந்து அவர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். அவர் எப்படி துன்புறுத்தப்பட்டார் என்பது அவர் கண் விழிக்கும்போதுதான் தெரியும். இப்போது எப்படி அதை நான் சொல்ல முடியும். அவரது ஈ.சி.ஜி இயல்பாக இல்லை. மேலும் அவரது நிலையை வைத்து பார்க்கும்போது அவர் துன்புறுத்தப்பட்டிருக்கிறார் என்பது தெரியவருகிறது. ” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“