அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை மதுரையில் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் ரூ.33.56 கோடியில் தொடங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டு வருகிறது.
Advertisment
அந்த வகையில், கோவை மாநகராட்சி மற்றும் மேட்டுப்பாளையம், மதுக்கரை ஆகிய இரு நகராட்சிகளில் இன்று முதல் கட்டமாக காலை உணவு திட்டம் துவங்கப்படுகிறது.
கோவையில் இந்த திட்டத்தை இன்று காலை ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவு சாப்பிட்டார்.
இந்த திட்டத்தின் மூலமாக கோவை மாவட்டத்தில் மட்டும் 9 ஆயிரத்து 104 மாணவ,மாணவிகள் பலன் அடைகின்றனர்.
Advertisment
Advertisements
இதைத்தொடர்ந்து, பேட்டியின்போது அமைச்சர் கூறுகையில்; முதலமைச்சரின் காலை உணவு திட்டம், மதுரையில் நேற்று துவங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கோவை, ராமநாதபுரம் மாநகராட்சிப் பள்ளியில் உணவு திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
மாணவ - மாணவிகள் எங்கள் அருகில் அமர்ந்து உணவருந்திய போது, உணவு நன்றாக இருக்கிறதா? என்று கேட்டதற்கு நாங்கள் வீட்டில் சாப்பிடுவதை விட நன்றாக உள்ளது என தெரிவித்தனர்.
இந்த சிறப்பு வாய்ந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பயன்படக்கூடிய மாணவ- மாணவிகள் முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்கள்.
இந்த சிறப்பு வாய்ந்த திட்டத்தை துவங்கி வைத்ததில் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறோம்.
முதல்வர், கோவை மாவட்டத்திற்கு அரசு நிகழ்ச்சியில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.
கோவை மாநகராட்சியில் குறிப்பாக கடந்த ஆட்சியில் பாதாள சாக்கடை திட்டம் சாலைகள் புதுப்பிக்கப்படவில்லை என முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, திட்ட அறிக்கை முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாநகராட்சி மூலமாக சாலைகள் அமைக்க 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என முதல்வர் தெரிவித்திருந்தார்.
முதல் கட்டமாக கோவை மாநகராட்சிக்கு 26 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் குறிப்பாக ஒண்டிப்புதூரில் 142 கிலோ மீட்டர் பாதாள சாக்கடைகள் திட்டத்துக்கு 177 கோடி ரூபாய் நிதிகள் வழங்கி, அரசாணைகள் வழங்க உள்ளது.
மின் கட்டண உயர்வு குறித்த கேள்விக்கு, மின் கட்டணம் உயர்வு தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது, மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கையில் 2010 ஆம் ஆண்டு எவ்வளவு மின் கட்டணம் செலுத்தினார்கள், 2022 ஆம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டு செலுத்த வேண்டிய மின் கட்டணம் இந்த மூன்றையும் ஒப்பிட்டு படித்துப் பார்த்தாலே தெரியும்.
64 விழுக்காடு கடந்த ஆட்சியில் உயர்த்தி உள்ளார்கள். மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளவர்கள் கடந்த ஆட்சியில் பொறுப்பில் உள்ளவர்கள். 2 கோடியே, 37 லட்சம் மின் நுகர்வோர்களில், ஒரு கோடி மின் நுகர்வோர்களுக்கு எந்த கட்டணமும் இல்லை.
ஒரு கோடி பேருக்கு இலவச மின்சாரம், 63 லட்சம் மின்னுகர்வோருக்கு இரண்டு மாதம் சேர்த்து 55 ரூபாய் உயர்த்தி உள்ளோம்.
ஏழை மக்கள் எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது.
நெசவாளர்களை பொறுத்தவரை, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிக மிகக் குறைந்த கட்டணம். 70 பைசா மட்டும்தான் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
போராட்டம் செய்யக் கூடியவர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் விசைத்தறி மின் கட்டணம் எவ்வளவு உயர்த்தினார்கள் ஒப்பிட்டு பார்த்தாலே தெரியும். 70 பைசா மட்டும்தான் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடன் சுமை இருந்தும், தமிழ்நாடு மின்சார வாரியம் 15 மாதங்களில் தடையில்லாத மின்சாரம் வழங்குகிறது. இதற்கு காரணம் முதலமைச்சர் மட்டும்தான். இழுத்து மூட இருந்த மின்சார வாரியத்திற்கு 3500 கோடி மானியத்தை ஒப்புதல் அளித்து, கூடுதலாக 4000 கோடி அளவில் வழங்கி மின்சார வாரியத்தை காப்பாற்றி உள்ளோம்.
வருகின்ற டிசம்பர் மாதம் 800 மெகாவாட் உற்பத்தியை தொடங்க பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. மின் உற்பத்தி 50 விழுக்காடு அதிகரிக்க வேண்டும் என மின் உற்பத்தி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதற்கான நிதி ஆதாரங்கள் டெண்டர் விடப்படும். தடையில்லாத மின்சாரம் அடிப்படை பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை குறித்த கேள்விக்கு தமிழ்நாடு முழுவதும் 2016 ஆம் ஆண்டு கடந்த ஆட்சியில் பொறுப்பில் இருந்தவர்கள் தாக்கல் செய்த வேட்பு மனு சொத்து மதிப்பு என்ன? 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தாக்கல் செய்த சொத்து மதிப்பு என்ன? ஐந்து ஆண்டுகளில் அவர்களுடைய சொத்து மதிப்பு எவ்வளவு என்று கவனத்தில் கொள்ளுங்கள்.
இந்த வருமானங்கள் எங்கிருந்து வந்தது? திமுக தேர்தல் வாக்குறுதியில் கடந்த ஆட்சியில் யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி கொடுத்திருந்தோம், நீதிமன்றம் சென்று அவர்கள் நிரபராதி என்று நிரூபிக்கலாம். வருமானம் எப்படி வந்தது என்ன சொல்லலாம். இதில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை.யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“