தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக 81 பேரிடம் 40 கோடி ரூபாய் மோசடி செய்தாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அந்த விவகாரம் தொடர்பான வழக்கில், இரண்டு வாரங்களில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில். அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடக்கிறது.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்வதற்காகச் சென்ற அதிகாரிகளை, அமைச்சரின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அதிகாரிகளின் காரையும் உடைத்துச் சேதப்படுத்தினர்.
இதனால் அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளாமல் கரூர் நகர காவல் நிலையத்திலும், மாவட்ட எஸ்.பி அலுவலகத்திலும் தஞ்சமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனன் வருமான வரித்துறையினர் சோதனை குறித்து எந்த தகவலும் காவல்துறைக்கு தெரிவிக்கவில்லை.
சோதனைக்கு வந்த அதிகாரிகளுடன் ஆர்பிஎஃப் வீரர்களும் வரவில்லை. கார் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து அறிந்த உடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் தெரிவித்தார். கரூரில் 9 இடங்களில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திமுகவை சேர்ந்தவர்கள் வருமானவரித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு தாக்கியதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் காயத்ரி, சுனில் குமார், பங்கஜ் குமார், கல்லா சீனிவாசராவ் ஆகிய 4 வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”