ஒவ்வொரு வீட்டிலும் தி.மு.க இளைஞரணி உறுப்பினர் இருக்கணுமாம்… கோவையில் செந்தில் பாலாஜி புதிய வியூகம்
கோவையில் ஒவ்வொரு வீட்டிலும் தி.மு.க இளைஞரணி உறுப்பினர் இருக்க வேண்டும் என்ற திட்டத்துடன் அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய வியூகத்துடன் களமிறங்கியுள்ளார்.
ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், கோவை பீளமேடு மசக்காளிப்பளையம் திடலில் இல்லந்தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு பணிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று தொடங்கி வைத்தார்.
Advertisment
திமுக இளைஞரணியில் புதிய உறுப்பினர் சேர்ப்பு பணிகள் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில் கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இதில் நேரடி கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை காட்டிலும் கோவை மாவட்டத்தில் தான் திமுக இளைஞரணியில் அதிக உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
திமுகவில் உள்ள இளைஞரணியின் கட்டமைப்பும் அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கையும் மற்ற அரசியல் கட்சிகளில் இல்லாத ஒரு சிறப்பாக பார்க்கப்படுகிறது. இளைஞரணி தொடங்கப்பட்டு 42" ஆண்டுகள் கடந்து தற்போது 43"ஆம் ஆண்டு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கிளை, ஒன்றிய, பேரூர், நகரம், மாநகரம், மாவட்டம் என அனைத்து நிலைகளிலும் திமுக இளைஞரணியின் அமைப்பு வலிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துமாறு உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியிருக்கிறார்.
குறிப்பாக கல்லூரி மாணவர்களை பெருமளவில் திமுக இளைஞரணி உறுப்பினர்களாக கொண்டு வரும் திட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி செயல்படுத்தியுள்ளார் .
இந்நிகழ்வு - ஒருங்கிணைந்த கோவை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் தளபதி இளங்கோ, கோட்டை அப்பாஸ், க.விஜயகுமார்,அ.அஸ்ரப் அலி,கே.வி.கே.எஸ்.சபரி கார்த்திகேயன்,நாகராஜசோழன் ஆகியோர் முன்னிலையில், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர். நா. கார்த்திக், மாநகர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர். பையா என்கின்ற கிருஷ்ணன் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர். சி ஆர் ராமச்சந்திரன் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர். மருதமலை சேனாதிபதி, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர். டாக்டர் வரதராஜன் மற்றும் திமுக இளைஞர் நிர்வாகிகள் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"