கரூர் மக்களவைத் தொகுதி தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேர்தல் நடத்தை விதிகளின்படி, தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடத்த 48 மணி நேரத்துக்கு முன் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஆனால், கரூர் மக்களவை தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்த ஆளுங்கட்சியைச் சேர்ந்த காளியப்பன் ஏப்ரல் 8ம் தேதி மனு அளித்துள்ளார். அந்த மனுவை ஏற்ற தேர்தல் அதிகாரி, உடனடியாக, ஏப்ரல் 8 மற்றும் 9ம் தேதிகளுக்கு அனுமதி வழங்கியது பாரபட்சமானது எனக் கூறி, தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் அதிகாரிகள் அனைத்து அரசியல் கட்சிகளையும் சமமாக பாவிக்க வேண்டும். ஒரு தலைபட்சமாக செயல்பட்ட கரூர் மக்களவை தொகுதி தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தேர்தல் முடிந்து விட்டதால் இந்த மனுவை ஏற்க முடியாது எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.