சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ள நிலையில், ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்தன.
உத்தரவு
இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் நாளை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றதாக கூறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் வழக்கில் அமலாக்கத்துறை செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவிற்காக இன்று (புதன்கிழமை) அவரை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், குற்றச்சாட்டு பதிவைத் தள்ளிவைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குற்றச்சாட்டு பதிவை மேற்கொள்ளக்கூடாது தள்ளிவைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டும் இருந்தது. மேலும், காணொளி மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்ய ஆட்சேபம் இல்லை என அமலாக்கத்துறை தரப்பில் இருந்தும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நாளை வரை ஒத்திவைத்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, நாளை மீண்டும் நேரில் ஆஜர் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். "நேரில் ஆஜர்படுத்தப்படவில்லை என்றால் காணொலி மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்" என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை நேரிலோ அல்லது காணொளி மூலமாகவோ ஆஜராக உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“