V Senthil balaj | Chennai High Court | Enforcement Directorate: சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்த அமலாக்கத்துறை விசாரணைப் பிறகு ஆகஸ்ட் 12ம் தேதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் அவருக்கு 19 முறை நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார். சிறையில் உள்ள செந்தில்பாலாஜி சமீபத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனிடையே, அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தொடர்ந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமை (19ம் தேதி) விசாரணைக்கு வரவிருந்தது.
இந்நிலையில், ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு பதில் புதன்கிழமைக்கு (21ம் தேதி) ஒத்திவைக்க வேண்டுமென செந்தில்பாலாஜி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை இன்று ஏற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணையை வரும் புதன்கிழமைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
மறுப்பு
அதேவேளை, தன்மீது பதியப்பட்டுள்ள அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து செந்தில்பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென செந்தில்பாலாஜி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரமேஷ், சுந்தர் மோகன் பார்வைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜியின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. வழக்கு வழக்கமான பட்டியலில் பட்டியலிடப்படும் என்று தெரிவித்த நீதிபதிகள் செந்தில் பாலாஜியின் கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.
காவல் நீட்டிப்பு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 21வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 20ம் தேதி வரை செந்தில் பாலாஜி காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்து உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“