V-senthil-balaji: சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நவம்பர் 15ம் தேதி மாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் சிறையில் இருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு இதயம் சார்ந்த பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் கழுத்து வலிப்பதாக கூறியதால் அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜிக்கு மேல் சிகிச்சை தேவை என மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
இதையடுத்து அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு செந்தில் பாலாஜிக்கு இதயவியல் பிரிவு தலைவர் மனோகரன் தலைமையிலான குழு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தது. அவருக்கு முதலாவது நாளாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், பித்தப்பையில் கல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்பிறகு 2வது நாள் பரிசோதனையில் கடும் தலைவலி, கால் மரத்துப் போதல் உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பிரச்சனைகளுக்கு சிறப்பு மருத்துவக் குழு செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தது.
இந்த நிலையில், ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜி இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் புழல் சிறைக்கு காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“