முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் செவ்வாய்க்கிழமை வரை கைது செய்ய கூடாது என
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டி.டி.வி.தினகரன் ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி, கடந்த 2011முதல் 2015ம் ஆண்டு வரை, ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். மேலும் அவர் அமைச்சராக இருந்த காலத்தில் 16 பேரிடம் தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலையில் அமர்த்துவதாக கூறி 95 லட்ச ரூபாய் பணம் பெற்று வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் புகாரளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், செந்தில் பாலாஜி, சகயாராஜ், பிரபு உள்ளிட்ட 3 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.
இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என கருதிய செந்தில் பாலாஜி, தனக்கு முன்ஜாமின் வழங்கக்கோரி
சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தன் உறவினர் எனக் கூறப்பட்ட பிரபு என்பவரிடம் பணத்தை வசூலித்து கொடுத்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த நபர் தன் உறவினர் அல்ல என்றும் புகார்தார்ரான கணேஷ்குமாரை தான் சந்தித்ததே இல்லை எனவும், மேலும் போக்குவரத்துத் துறையினர் அனைத்து நியமனங்களும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமே நடத்தப்படுகிறது. மேலும் இந்த வழக்கு அரசியல் பழிவாங்கும் நோக்கில் போடப்பட்டுள்ளது. தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களில் நானும் ஒருவன்.
இந்த வழக்கு தொடர்பாக கூர்க் சென்ற சக எம்.எல்.ஏ.க்களின் வாகனத்தை காவல் துறையினர் வழி மறித்தனர் விசாரித்துள்ளனர். இவ்வழக்கில் தன்னை காவல் துறையினர் கைது செய்ய முயன்று வருவதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார். மேலும், 23 மாதங்களுக்குப் பிறகே இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பொய்யான புகார் இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கின்ற அனைத்து நிபந்தனைகள் ஏற்கின்றேன். எனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் மணிசங்கர், இந்த வழக்கில் தலைமை வழக்கறிஞர் வாதாட உள்ளதால் இந்த வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என கோரினார்.
அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அப்படியெனில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் வரை செந்தில்பாலாஜியை கைது செய்ய மாட்டோம் என காவல்துறை தரப்பில் உறுதியளிக்க கோரினர்.
ஆனால் அரசுத்தரப்பில் உறுதியளிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி, இந்த வழக்கு முன்ஜாமீன் கோரி தொடரப்பட்டது. மேலும் இன்றைய தினத்துக்கு பின் வரும் 2ம் தேதி வரை நீதிமன்றத்துக்கு விடுமுறையாகும். எனவே இடைப்பட்ட சமந்த்தில் மனுதாரரை கைது செய்ய மாட்டார்கள் என்ற என்ன உத்தரவாதம் இருக்கிறது? எனவே இது தொடர்பாக அரசின் கருத்தையறிந்து தெரிவிக்குமாறு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.
இதனையடுத்து பிற்பகல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, அப்போது அரசு தரப்பில் இந்த வழக்கில் தலைமை வழக்கறிஞர் ஆஜராகவுள்ளார். எனவே மனுவை தள்ளிவைக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து நீதிபதி, இந்த வழக்கை வரும் (3ம் தேதி) செவ்வாய்கிழமைக்கு தள்ளிவைக்கின்றேன் என உத்தரவிட்டார். மேலும் அதுவரை செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.