சட்ட விரோத பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டார். அவரை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள், இரு வேறு தீர்ப்புகளை வழங்கினர். இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு காரணமாக வழக்கு 3ஆவது நீதிபதி விசாரணைக்கு சென்றது.
தொடர்ந்து, அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் 3-வது நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.
அப்போது, எந்தெந்த கருத்துக்களில் இரு நீதிபதிகளும் முரண்பட்டுள்ளனர் என்பது குறித்து, மேகலா தரப்பிலும், அமலாக்கத் துறை தரப்பிலும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதையடுத்து, வழக்கில் இறுதி முடிவெடுக்க, விசாரணையை 11 மற்றும் 12ஆம் தேதிகளுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மேகலாவின் ஆட்கொணர்வு மனு குறித்தும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினார்கள்.
அப்போது மேகலா வழக்கறிஞர் செந்தில் பாலாஜியை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை என வாதாடினார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூலை 12ஆம் தேதியுடன் முடியவுள்ள நிலையில், அவருக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம், காவல் நீட்டிப்பு வழங்கலாம் எனவும் நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“