வருகிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சி மேயர் பதவியை திமுக வெற்றி கொள்ள வேண்டும் என்ற திட்டத்துடன் அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவையின் 100 வார்டுகளிலும் கரூர் நிர்வாகிகளை பொறுப்பாளர்களாக நியமித்து மாஸ்டர் பிளானுடன் களம் இறங்கி இருக்கிறார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோவையை அதிமுகவின் கோட்டையாக மாற்றி வைத்துள்ளார். அதனால்தான், கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றாலும் கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக தோல்வியடைந்தது. இது திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
மு.க. ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு, மாநிலம் முழுவதும் திமுகவை வலுப்படுத்த வேண்டும் தமிழகத்தையே திமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் அமைச்சர்களுக்கு அசைன் மெண்ட் கொடுத்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல நிகழ்ச்சிகளில், திமுகவுக்கு வாக்களிதாவர்கள் ஏன் வாக்களிக்காமல் போனோம் என்று வருந்தும் அளவுக்கு அனைவருக்கும் நன்மைகளை செய்ய வேண்டும் என்று கூறி வருகிறார்.
நடந்து முடிந்த 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசின் வளர்ச்சித் திட்டங்களைக் கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அமைச்சர் என அனைத்து மாவட்டங்களுக்கும் அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்தார். இந்த நடவடிக்கைக்கு கைமேல் பலனாக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றது.
கோவை மாவட்டத்துக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல, அமைச்சர் கே.என்.நேரு சேலம் மாவட்டத்துக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவையில் ஒரு தொகுதியில்கூட திமுக வெற்றி பெறாததால், அதிகாரிகளும் திமுகவினருக்கு ஒத்துழைக்கவில்லை என்று திமுக நிர்வாகிகளே வெளிப்படையாக புலம்பத் தொடங்கிவிட்டனர். அதனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் உள்ள அனைத்து வார்டுகளையும் திமுக வெற்றிகொள்ள வேண்டும் என்று திமுகவினர் ஆக்ரோஷத்துடன் பேசி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில்தான், வருகிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கோவை மாவட்ட பொறுப்பாளராக உள்ள செந்தில் பாலாஜி, கோவை மாநகராட்சி மேயர் பதவியை திமுக வெற்றி கொள்வதோடு, 100 வார்டுகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் 100 வார்டுகளுக்கும் கரூர் திமுக நிர்வாகிகளை பொறுப்பாளர்களாக நியமித்து மாஸ்டர் பிளானுடன் களம் இறங்கியுள்ளார்.
கூட்டுறவு கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி ஆகியவை அரசாணைகளோடு அப்படியே இருப்பதால் மக்கள் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய பிறகு, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்பதால் திமுக கட்சி கட்டமைப்புகளை பலப்படுத்தும் வேலையில் இறங்கி இருக்கிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மாஸ்டர் பிளானாக, கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில், 1,290 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பூத்துக்கும் தலா, 10 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைக்கப்படுகிறது. இந்த பூத் கமிட்டியில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களை உறுப்பினர்களாக நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகளை, இந்த பூத்துகளுக்கு பொறுப்பாளராக பாலாஜி நியமித்திருக்கிறார். மேலும், கோவை திமுக நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் அறிவுறுத்தியுள்ளார். ஒவ்வொரு வார்டுக்கும் வியூகம் அமைத்து 100 வார்டுகளையும் ஜெயிக்க வேண்டும் என மாஸ்டர் பிளான் போட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, 'கோவை மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்றியாக வேண்டும் என்ற கட்சித் தலைமையின் நோக்கத்தை நிறைவேற்ற கச்சிதமான மாஸ்டர் பிளானுடன் களமிறங்கியிருக்கிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.