டிடிவி.தினகரன் அணியை சேர்ந்தவரும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி தனது மீதான மோசடி வழக்கில் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
டிடிவி.தினகரன் அணியின் முக்கிய பிரமுகராக இருந்து வருபவர், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி. இவர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்துக் கழகத்தில் பலருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி, பணம் மோசடி செய்ததாக இவர் மீது புகார்கள் எழுந்தன.
தற்போது டிடிவி.தினகரன் அணிக்கு ஆதரவாக செந்தில்பாலாஜி செயல்பட்டு வரும் நிலையில், அந்த புகார்களை போலீஸார் கையில் எடுத்திருக்கிறார்கள். எந்த நேரத்திலும் செந்தில்பாலாஜி கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தனக்கு முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் செந்தில்பாலாஜி.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது.. ‘போக்குவரத்து ஊழியர் கணேஷ்குமார் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி புகார் அளித்தார். அதில், அரசு போக்குவரத்தில் வேலை வாங்கி தருவதாக பிரபு, சகாயராஜ் ஆகியோர் ஏமாற்றியதாக, பணம் கொடுத்து ஓராண்டாகியும் வேலை வாங்கிதராமல் ஏமாற்றப்பட்டதாகவும், 16 பேருக்கு வேலை வாங்கி தருவதாக 95 லட்ச ரூபாய் மோசடி செய்ததாகவும் புகார் கொடுத்துள்ளார்.
பணம் கொடுத்ததாக கூறும் 26 மாதங்களுக்கு பிறகு அவர் புகார் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதுபோன்று யாருக்கும் சிபாரிசு மூலம் பணிகள் வழங்கியதில்லை. பிரபு எனது உறவினரே இல்லை, அவர் அதிமுக நிர்வாகி மட்டுமே. பணிநியமன தொடர்பான குழுவில் முடிவெடுப்பது முழுக்க போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் தான் முடிவெடுப்பார். ஆனால் அந்த புகாரின்மீது வழக்கு பதிவு செய்யாததால், உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்தபின்னர் புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய செப்டம்பர் 8 ஆம் தேதி உத்தரவிட்டது.
அதனடிப்படையில் செப்டம்பர் 9 ஆம் தேதி கொலை மிரட்டல், ஏமாற்றுதல், மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது என்பது பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் நானும் ஒருவன் என்பதால் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கணேஷ்குமார் கொடுத்த புகார் அடிப்படையில் கூர்க் அருகில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்கியிருக்கும் இடங்களுக்கு சென்று, என்னை கைது செய்யும் நோக்கில் காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். என் மீது ஜாமினில் வெளிவரமுடியாத பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், முன் ஜாமின் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.