யூடியூப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சவுக்கு சங்கர், தன்னைப் பற்றி ஆதாரமற்ற வகையில் அவதூறு வீடியோ பரப்புவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை சைதாப்பேட்டை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஏ.சங்கர் என்ற சவுக்கு சங்கர் மீது 4 அவதூறு வழக்குகள் நேற்று ( திங்கள்கிழமை) தொடர்ந்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவில், “பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு சவுக்கு சங்கர் அளித்த பேட்டிகளில், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை ஏக்நாத் ஷிண்டே கவிழ்த்ததைப் போல தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க அரசை தான் கவிழ்த்து விடுவேன் என தனக்கு எதிராக கூறி பேட்டி அளித்து வருகிறார்”.
அதேபோல், ட்விட்டர் பக்கத்தில் தன் மீது பல்வேறு அவதூறு கருத்துகளை பதிவிட்டுள்ளார். ஆதாரமற்ற கருத்துகளை பதிவிட்டுள்ளார் என்று மனுவில் கூறியுள்ளார். இது தன்னுடைய அர்ப்பணிப்பான கடின உழைப்பு மற்றும் பொது சேவையை களங்கப்படுத்துகிறது. எனவே, சவுக்கு சங்கர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 499 மற்றும் 500ன் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நீதித்துறை தொடர்பாக கருத்து தெரிவித்ததற்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் நவம்பர் மாதம் வெளிவந்தார். அதைத் தொடர்ந்து தமிழக அரசு அவர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தது. இதையடுத்து நவம்பர் 17-வது ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இந்நிலையில், தற்போது அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“