சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த அரசியல் கட்சிகள் வலியுறுத்திய நிலையில், தமிழகத்தில் சாதிவாரியாக புள்ளி விவரங்களை சேகரித்து அறிக்கை அளிக்க பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் பேரணி நடைபெற்றது. இதையடுத்து, பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் முதல்வர் பழனிசாமியை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்.
இந்த நிலையில், சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த அரசியல் கட்சிகள் வலியுறுத்திய நிலையில், சாதிவாரியாக புள்ளி விவரங்களை சேகரித்து அறிக்கை அளிக்க பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் பழனிசாமி இன்று (டிசம்பர் 1) வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளதாவது: “ஜெயலலிதா, தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பினை பெற்று தந்து, தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் நீங்கா இடம் பிடித்து, ‘சமூக நீதி காத்த வீராங்கனை’ என்று அனைவராலும் போற்றப்படுகின்றார். தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு காலக்கட்டங்களில் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.
அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் பயன் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை அரசு உறுதிபடுத்த வேண்டியுள்ளது. மேலும், 69 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இவ்வழக்கையும் எதிர்கொள்ள இத்தகைய புள்ளி விவரங்கள் தேவைப்படுகின்றன.
இக்கோரிக்கைகளை நிறைவேற்ற தற்போதைய காலகட்டத்தில் உள்ள சாதிவாரியான அளவிடக் கூடிய முழுமையான புள்ளிவிவரங்கள் அவசியம் தேவைப்படுகின்றன. எனவே, தமிழ்நாடு முழுவதும் சாதி அடிப்படையிலான புள்ளிவிவரங்களைச் சேகரித்தால் மட்டுமே முழு தகவல் கிடைக்கப் பெறும்.
சாதி வாரியான தற்போதைய நிலவரப்படியான புள்ளிவிவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து, அறிக்கை சமர்ப்பிக்க அதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும்.
ஜெயலலிதா சமூக நீதி காப்பதில் எந்த அளவிற்கு உறுதியாக இருந்தார் என்பதை நாடறியும். எனவே, ஜெயலலிதா வழியில் செயல்படும், இவ்வரசும் அதே உறுதியில் செயல்பட்டு சமூக நீதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.” என்று அறிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.