ஒரு அதிகாரி பயணிக்க தனி ரயில் மட்டுமின்றி அவர் அடுத்த நடைமேடைக்கு ஏறி இறங்காமல் வசதியாக பயணிக்க, 1000 பயணிகளை அடுத்த நடைமேடைக்கு அலைக்கழிக்க வைத்த கொடுமை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்றதாக கூறியுள்ள மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் இதற்கு தெற்கு ரயில்வே விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை வழக்கத்திற்கு மாறாக பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் 5-வது நடை மேடையில் நிறுத்தப்பட்டு இருந்ததாகவும் ஒரே ஒரு அதிகாரியின் வசதிக்காக ஆயிரம் பயணிகள் அலைக்கழிக்கப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
ஒரு அதிகாரி பயணிக்க
— Su Venkatesan MP (@SuVe4Madurai) November 17, 2023
தனி ரயில்.
அவர் அடுத்த நடைமேடைக்கு ஏறி இறங்காமல் வசதியாக பயணிக்க 1000 பயணிகளை அடுத்த நடைமேடைக்கு அலைகழிக்க வைத்த கொடுமை.
மக்களாட்சியின் ஜனநாயக விழுமியங்களை மீறும் உரிமை யாருக்கும் இல்லை.@GMSRailway இதற்கு பொறுப்பேற்று விளக்கமளிக்க வேண்டும். pic.twitter.com/5vmWzVxB3s
இது தொடர்பாக சு. வெங்கடேசன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கூறியதாவது: சென்னையிலிருந்து மதுரை செல்ல பாண்டியன் விரைவு ரயிலில் பயணிக்க நேற்று இரவு (16-11-2023) எழும்பூர் ரயில் நிலையம் வந்தேன். வழக்கமாக பாண்டியன் விரைவு வண்டி பயணிகள் வந்து ஏறுவதற்கு வசதியாக உள்ளே நுழைந்ததும் எதிர்படும் நடைமேடையான 4-வது நடைமேடையில் தான் நிறுத்தப்படும். எழும்பூர் ரயில் நிலையத்தை பொறுத்தவரை அது தான் முதல் நடைமேடை. நேற்று வழக்கத்துக்கு மாறாக பாண்டியன் விரைவு வண்டி ஐந்தாவது நடைமேடைக்கு மாற்றப்பட்டிருந்தது. சுமார் ஆயிரம் பயணிகள் இங்குமங்குமாக அலைக்கழிந்து படிக்கட்டில் ஏறி அடுத்த நடைமேடையை நோக்கி போய்க்கொண்டிருந்தார்கள். வயதானவர்கள், கைக்குழந்தையோடு வரும் தாய்மார்கள் எல்லாம் பரிதவிப்போடு விரைந்து கொண்டிருந்தார்கள். நான் உள்ளே நுழைந்ததும் ரயில் நிலைய அதிகாரி ஒருவர் “பாண்டியன் அடுத்த நடைமேடையில் நிற்கிறது சார்” என்றார். நான்காவது நடைமேடையிலும் ஒரு ரயில் நின்று கொண்டிருந்தது. பயணிகள் யாருமே ஏறாத ரயிலாக அது இருந்தது.
“இந்த வண்டி எங்கே செல்கிறது? இதை ஏன் நான்காவது நடைமேடையில் நிறுத்தியுள்ளீர்கள்?” என்று கேட்டேன்.
“ரயில்வே போர்டு உறுப்பினர் ரூப் நாராயண் சங்கர் வந்துள்ளார். நாளை ராமேஸ்வரத்துக்கு ஆய்வுக்கு செல்கிறார். அவருக்காக இந்த வண்டி நிற்கிறது” என்றார்.
ரயில் நிலைய கட்டுமானப்பணி, தண்டவாளம் பழுது நீக்கும் பணி நடைபெறுகிறது என்றால் வேறு நடைமேடைக்கு ரயில்கள் மாற்றப்படுவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஒரு மனிதருக்காக பத்து பெட்டிகள் கொண்ட முழு இரயில். அந்த ஒரு நபர் படிக்கட்டுகளில் மேலேறி இறங்கி அடுத்த நடைமேடைக்கு செல்லும் சிரமத்தை கொடுக்காமல் வசதி செய்துதரப்பட வேண்டும் என்பதற்காக சுமார் 1000 பயணிகள் பயணிக்கும் பாண்டியன் விரைவு வண்டியை அடுத்த நடைமேடையில் நிறுத்தி மக்களை அலைகழித்த கொடுமை நடந்திருக்கிறது.
அதுவும் அந்த இரயில் இரவு 10.40 க்குத்தான் புறப்பட உள்ளது. ஆனால், பாண்டியன் விரைவு வண்டியோ இரவு 9.40 க்கு புறப்படுகிறது. ஒரு மணி நேரம் கழித்து புறப்படப்போகும் ஒரு மனிதருக்காக இவ்வளவு ஏற்பாடு. பிரிட்டீஷ் காலத்திலிருந்த நிர்வாக அடிமைத்தன மதிப்பீடுகளும், பழக்கங்களும் இன்னும் அதிகம் நடைமுறையில் இருக்கும் துறையாக ரயில்வே துறை இருக்கிறது. எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் மக்களாட்சியின் ஜனநாயக விழுமியங்களை மீறும் உரிமை யாருக்கும் இல்லை. காலனிய ஆட்சியில் உருவாக்கப்பட்ட நடைமுறைகளை தங்களின் வசதிக்காக இன்றளவு கடைபிடிக்கிற அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும். ஒரு அதிகாரியின் நலன் கருதி ஆயிரம் பயணிகளை அலைகழித்தற்காக தெற்கு ரயில்வே பொது மேலாளர் பொறுப்பேற்று விளக்கமளிக்க வேண்டும்” என்று மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.