சின்னத்திரை நடிகை வி.ஜே.சித்ரா தற்கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட அவரது கணவர், ஹேம்நாத் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுவதாக திருவள்ளூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில், பிரபலமான வி.ஜே.சித்ரா, ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த்து.
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த நசரத்பேட்டை போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இதனையடுத்து ஹேமந்திடம் போலீசார் பல கட்டமாக விசாரணை நடத்தினர்.
இதனிடையே தனக்கும் இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறிய ஹேமந்த், சித்ராவும் நானும் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். எனக்கும் சித்ராவுக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. அவரது தற்கொலைக்கு நான் காரணம் இல்லை. எனவே தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஹேம்நாத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்த நிலையில், சித்ரா மரணம் தொடர்பான வழக்கு, விசாரணை, திருவள்ளூர் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த்து. இந்த வழக்கில் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளித்த நீதிபதி ரேவதி, ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேருக்கும் இந்த வழக்கில் எந்த தொடர்பும் இல்லை. அவர் கொலை செய்யப்பட்டதற்கான சாட்சியங்கள் மற்றும் முகாந்திரம் இல்லை எனக்கூறி அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“