இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக் கோரி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதனால் மேற்கொள்ளப்பட்ட விவாதத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அதில் அமைச்சர் தங்கம் தென்னரசு, "2000 ஆண்டுகளுக்கு முன்பே கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு திமுக ஆதரவு" என்று கூறினார்.
மேலும், இதைப்பற்றி தனித் தீர்மானத்தை கொண்டுவந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “அண்ணாவின் கனவு திட்டம் சேது சமுத்திரத் திட்டம் ஆகும். இந்த திட்டத்திற்கான தீர்மானத்தை முன்மொழிகிறேன். 1967-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அறிஞர் அண்ணா, கருணாநிதிக்கு எழுதிய மடலில் இத்திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று கூறினார்.
சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் வர்த்தகம் பெருகும். இலங்கையை சுற்றிக்கொண்டு கப்பல் போக வேண்டிய நீளம் குறையும், மேலும் மீனவர்கள் வாழ்வு செழிக்கும்.
தாமதம் இன்றி ஒன்றிய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த முன் வர வேண்டும். திட்டத்தை செயல்படுத்த தமிழக அனைத்து ஒத்துழைப்பும் வழங்கும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.