/indian-express-tamil/media/media_files/2025/08/23/transgender-woman-arrested-2025-08-23-19-01-03.jpg)
7 வருடம் ரகசிய லிவிங் டூ கெதர் உறவு: இளைஞரை கொல்ல முயன்ற திருநங்கை உட்பட 7 பேர் கைது
சென்னை மதுரவாயல் ஜானகி நகரை சேர்ந்த அஜித் என்ற இளைஞர், வானகரத்தில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஆக.20-ம் தேதி இரவு, போரூரிலிருந்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய குற்றவாளி, திருநங்கை ரீட்டா என்பது தெரியவந்துள்ளது.
போரூரைச் சேர்ந்த திருநங்கை ரீட்டாவும் அஜித்தும் கடந்த 7 ஆண்டுகளாக ரகசியமாக ஒரே வீட்டில் கணவன்-மனைவிபோல் வாழ்ந்து வந்து உள்ளனர். இந்த உறவுக்குள் திடீரெனப் பிரச்னை ஏற்பட்டது. அஜித்திற்கு அவரது வீட்டில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதே இதற்குக் காரணம். தனக்குத் திருமணம் நடைபெற இருப்பதால், இந்த உறவைத் தொடர முடியாது என அஜித் ரீட்டாவிடம் தெரிவித்துள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாத ரீட்டா, அஜித்துடன் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார். ஆனாலும், அஜித் ஆகஸ்ட் 27-ம் தேதி வீட்டில் பார்த்த பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்யத் தயாராகி வந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த ரீட்டா, 'தன்னுடன் வாழாத அஜித்தை வேறு யாருடனும் வாழ விடமாட்டேன்' என்று சக திருநங்கைகளிடம் தெரிவித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மாங்காட்டைச் சேர்ந்த தனது தோழி விஷ்ணுவின் உதவியுடன், அஜித்தை கொலை செய்யவோ அல்லது கை கால்களை வெட்டவோ திட்டமிட்டுள்ளார். இந்தத் தாக்குதலுக்காக, விஷ்ணு பலமுறை ரீட்டாவை இரவு நேரங்களில் அழைத்துச் சென்று ஆலோசனை செய்துள்ளார்.
விஷ்ணுவின் நண்பரான பிரவீன்குமாரிடம், தனது சகோதரியுடன் 10 வருடங்களாகப் பழகி ஏமாற்றிவிட்டதாகக் கூறி, அஜித்தை வெட்டுவதற்கு உதவி கேட்டுள்ளார். ரீட்டாவுடன் தொடர்ந்து வாழ வேண்டும் என விஷ்ணு, அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து, ரீட்டாவும் விஷ்ணுவும் அஜித்தை கொலை செய்ய முடிவெடுத்துள்ளனர்.
ஆக.20-ம் தேதி இரவு, உடனடியாகப் பேச வேண்டும் என அஜித்தை ரீட்டா போனில் அழைத்து போரூருக்கு வரவழைத்துள்ளார். பேச்சுவார்த்தை முடிந்ததும், இரவு 12 மணியளவில் வானகரம் சுங்கச்சாவடியின் சர்வீஸ் சாலை வழியாக அஜித் தனது புல்லட் வாகனத்தில் வீட்டிற்குச் சென்று உள்ளார். அஜித்துக்காகக் காத்திருந்த ரீட்டா, விஷ்ணு, மெக்கானிக் பிரவீன் குமார் மற்றும் அவரது நண்பர்களான சூர்யா, பிரசாந்த், பிரவீன், மணிகண்டன் ஆகியோர் அஜித்தை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த அஜித், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபடியே வானகரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் அடிப்படையில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, ரீட்டா உட்பட 7 பேரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.