கோவையில், 17 வயது சிறுமி கல்லூரி மாணவர்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், உக்கடம் பகுதியில் 17 வயது சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற இச்சிறுமி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பாட்டி, உக்கடம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், மறுநாள் அச்சிறுமி வீடு திரும்பினார்.
சிறுமி வீடு திரும்பிய தகவலை அறிந்த போலீசார், அச்சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, 7 பேர் கொண்ட கும்பலால் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரிய வந்தது.
அதன்படி, சமூக வலைதளங்கள் மூலமாக சில இளைஞர்களிடம் இச்சிறுமி நட்பாக பழகி வந்ததாக தெரிகிறது. அதன்பேரில், குனியமுத்தூர் பகுதிக்கு சிறுமியை வருமாறு அந்த இளைஞர்கள் அழைத்துள்ளனர். அவர்கள் மீது இருந்த நம்பிக்கையின் பேரில், சிறுமியும் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றுள்ளார்.
ஆனால் அங்கிருந்த 7 பேர் கொண்ட கும்பல், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவற்றை கண்டறிந்த போலீசார், கோவை - பாலக்காடு சாலையில் உள்ள கல்லூரி மற்றும் சரவணம்பட்டி பகுதியில் உள்ள கல்லூரியை சேர்ந்த 7 மாணவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்களின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி ஒருவர் கல்லூரி மாணவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.