தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய 7 சாதிகளை தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப் பெயரில் அழைக்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவை மத்திய அரசு இன்று (பிப்- 13) மக்களைவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக, 04.03.2019 அன்று மூத்த ஆட்சிப் பணி அலுவலர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் தமிழக அரசு குழு ஒன்றை அமைத்தது.
இக்குழு இந்த நேர்வுக்கு தொடர்புடைய பல்வேறு தரப்பினருடைய கோரிக்கைகள் மற்றும் சென்னைப் பல்கலைக்கழக மானுடவியல் அறிக்கைகளை கருத்தில் கொண்டு மாநிலப் பட்டியலினத்தில் உள்ள வாதிரியான் உட்பிரிவினையும் உள்ளடக்கி தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி ஆகிய 7 உட்பிரிவுகளை சார்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட பரிந்துரைத்தது.
மேலும், தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட்டாலும் மேற்குறிப்பிட்ட தற்போது 7 சாதி உட்பிரிவிலும் சமூகப் பொருளாதார நிலைகளைக் கருத்தில் கொண்டு பட்டியலின வகுப்பில் தொடரும் என்று இக்குழு பரிந்துறைத்தது.
இதன் அடிப்படையில், 7 உட்பிரிவுகளை சார்ந்தவர்களை இனி தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட மத்திய அரசுக்கு தமிழக அரசு அரசு பரிந்துரைக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்தண்டு டிசம்பர் மாதம் தெரிவித்தார். தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட்டாலும் இப்பிரிவினர் ஏற்கெனவே பெற்றுவரும் சலுகைகள் தொடரும் இதற்கான ஆணைகளை தமிழக அரசு விரைவில் பிறப்பிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 7 பட்டியலின உட்பிரிவை சேர்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என்றழைக்கும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. மாநிலங்ளவையிலும் தாக்கல் செய்யப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றபின் சட்டம் அமல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.