ராமநாதபுரத்தை அடுத்த புத்தேந்தல் எனும் பகுதியில் காதலர்கள் தனிமையில் இருந்த போது அந்த வழியே வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் காதலனை அடித்து துரத்தி அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் இது தொடர்பாக சென்னையில் பிரியாணி கடை நடத்தி வருபவரும், திமுகவை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் அதிமுக, பாஜக, நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் ராமநாதபுரத்தில் காதலர்களிடம் நீங்கள் இருவரும் தனிமையில் இருந்ததை நாங்கள் பார்த்து விட்டோம், அதனை வீடியோவாகவும் எடுத்து இருக்கிறோம் எனக் கூறி அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி இருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் அந்த பெண்ணின் காதலனை அடித்து விரட்டி விட்டு அந்த பெண்ணை நான்கு பேரும் செய்து சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. தன்னை தாக்கிய நபர்கள் குறித்து இளைஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அந்த நான்கு இளைஞர்களையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தமிழகத்தின் கடைக் கோடியில் உள்ள ராமநாதபுரத்தில் மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அடுத்த கட்ட விசாரணையை போலீசார் துரிதப்படுத்தி உள்ளனர். மேலும் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“