லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி-யாக இருந்தவர் மீதான பாலியல் வழக்கை தெலங்கானா காவல் துறைக்கு விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்பு துறை ஐஜி-யாக இருந்தவர் மீது பெண் எஸ்பி ஒருவர் கடந்த ஆண்டு பாலியல் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரிக்க விசாகா குழு அமைக்கப்பட்டது.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பெண் எஸ்பி தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, லஞ்ச ஒழிப்பு துறை ஐஜிக்கு எதிராக சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை ஐஜி தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சி.வி கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஐஜிக்கு எதிரான பாலியல் புகார் மற்றும் இது தொடர்பாக சிபிசிஐடி பதிவு செய்துள்ள வழக்குகளை உள்ளிட்ட அனைத்தையும் தெலங்கானா காவல்துறை விசாரிக்க உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்குகளை விசாரிக்க, மூத்த பெண் காவல் அதிகாரியை விசாரணை அதிகாரியாக தெலங்கானா டிஜிபி நியமிக்கவும், இந்த விசாரணையை 6 மாத காலத்திற்குள் முடித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதேபோல, இந்த வழக்கை தெலங்கானா காவல் துறைக்கு மாற்றியதால், தமிழக காவல்துறையின் மீது நம்பிக்கை இல்லை என அர்த்தமாகாது என்று தெரிவித்த நீதிபதிகள், தமிழக தலைமை செயலாளர் இந்த வழக்கின் ஆவணங்களை உடனடியாக தெலங்கானா காவல்துறைக்கு வழங்கவும் உத்தரவிட்டனர்.