/indian-express-tamil/media/media_files/2025/03/25/vn3f8AhMBGHjE5BvVEbu.jpg)
சென்னை, தரமணியில் உள்ள தருமாம்பாள் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வரும் மாணவி ஒருவர் அவரது தோழியுடன் கடந்த 16-ம் தேதி விடுதியில் இருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர், அன்றிரவு உடன் சென்ற தோழி மட்டும் விடுதிக்கு வந்துள்ளார். ஆனால், அந்த மாணவி வரவில்லை. மறுநாள் காலை அந்த மாணவி கை, கால், முகம் உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் கல்லூரிக்கு வந்துள்ளார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் மாணவியிடம் விசாரணை நடத்தியபோது தனது ஆண் நண்பருடன் வெளியே சென்றதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து எந்த விசாரணையும் நடத்தாமலும், மாணவியின் பெற்றோருக்கும் தெரிவிக்காமலும், காவல்துறைக்கும் தெரிவிக்காமலும் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகம் இருந்துள்ளது.
இதையடுத்து, மார்ச் 18-ம் தேதி அந்த மாணவியின் பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து அவர்களிடம், “உங்கள் மகளின் நடவடிக்கை சரியில்லை. இனி உங்கள் மகளை கல்லூரிக்கு அனுப்ப வேண்டாம்” எனக் கூறி அனுப்பி உள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் வெளியில் யாருக்கும் தெரியக்கூடாது என்பதால் மற்ற மாணவிகளின் செல்ஃபோன்களையும் கல்லூரி நிர்வாகத்தினர் வாங்கி வைத்துக் கொண்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த இந்திய மாணவர் சங்கத்தின் காயங்களுடன் கல்லூரிக்கு வந்த மாணவியிடம் முறையான விசாரணை ஏன் நடத்தவில்லை? குழந்தைகள் நல அமைப்பிற்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்காதது ஏன்? பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ கவுன்சிலிங் கூட அழைத்து செல்லப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய இந்திய மாணவர் சங்கத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் கல்லூரி வாயில் முன்பாக அமர்ந்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மாணவர் சங்கத்தினரின் கேள்விகளுக்கும் போராட்டத்துக்கும் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகம் முறையான பதில் அளிக்க மறுத்ததால், இந்திய மாணவர் சங்கத்தினர் கல்லூரி கேட்டுக்கு முன்பாக இருந்த போலீசாரை மீறி கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இந்திய மாணவர் சங்கத்தினரை போலீசார் தடுக்க முற்பட்டபோது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் தள்ளுமுள்ளு கைகலப்பாக மாறியதாக தெரிகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் மாணவர் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கல்லூரியில் இருந்து கலைந்து செல்லவில்லை என்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். பாலிடெக்னிக் கல்லூரிக்குள் உள்ளே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் உடனடியாக மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு கவுன்சிலிங் கொடுத்து, ஆதாரங்களை வைத்து அவருக்கு என்ன நடந்தது? பாலியல் வன்கொடுமை ஏதாவது நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளி யாராக இருந்தாலும் அவர்களை தண்டிக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, இந்திய மாணவர் சங்கத்தினர் கலைந்து சென்றனர். இதனால், பாலிடெக்னிக் கல்லூரி வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.
இந்திய மாணவர் சங்கத்தினரின் போராட்டத்தைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகத்திடம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.