4 லட்சம் ஆசிரியப் பட்டதாரிகளுக்கு 5 ஆண்டுகளில் தமிழக அரசு வேலை வழங்குமா? உயர்நீதிமன்றம் கேள்வி

குறைந்தது 5 ஆண்டுகளுக்குள் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமா? ஒவ்வொரு ஆண்டும் எத்தனை ஆசிரியர் இடங்கள் காலியாகும்? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு தமிழக அரசால் வழங்க...

4 லட்சம் ஆசிரியப் பட்டதாரிகளுக்கு 5 ஆண்டுகளில் அரசு வேலை வழங்குமா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது

கடந்த 3 ஆண்டுகளில் ஆசிரியர் படிப்பை நிறைவு செய்த சுமார் 4 லட்சம் பேருக்கு எத்தனை ஆண்டுகளில் வேலைவாய்ப்பை வழங்க தயாராக இருக்கிறது என்பது குறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் எஸ்விஐ என்ற கல்வியல் கல்லூரி கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 2017-18 ஆம் கல்வியாண்டில் இளங்கலை கல்வியியல் படிப்பில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், புதிதாக முதுகலை படிப்பை தொடங்கவும் அணுமதி கோரப்பட்டது. அந்த விண்ணப்பத்தை நிராகரிப்பது தொடர்பாக தேசிய ஆசிரியர் கல்விக்கழகம் கல்லூரி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி கல்லூரி நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், தமிழகத்தில் கல்வித்தரம் குறைவதற்கு லெட்டர்பேடு கல்லூரிகளும் அங்கு பயின்ற ஆசிரியர்களுமே காரணம் என ஏற்கெனவே குறிப்பிட்டு, இதுதொடர்பாக தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்தார். மேலும் இந்த வழக்கில் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில், ‘‘ திருச்சி கல்வியியல் கல்லூரிக்கு எதிராக பெங்களூருவில் உள்ள தேசிய கல்விக்கழகத்தின் மண்டல இயக்குநர் அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்ட கல்லூரியில் 2 வாரத்தில் ஆய்வு நடத்தி உரிய உத்தரவுகளை தேசிய கல்வி்க்கழகம் பிறப்பிக்க வேண்டும். அதுபோல இந்த வழக்கில் எத்தனை ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன. அவற்றில் பயிலும் ஆசிரியப் பட்டதாரிகளின் தற்போதைய நிலை என்ன? எத்தனை பேருக்கு பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளது? என பல கேள்விகளை எழுப்பி மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டும், இதுவரை பதிலளி்க்கவில்லை.

ஆனால் தமிழ்நாடு ஆசிரியர் கல்விக்கான பல்கலைக்கழகம் தாக்கல் செய்துள்ள பதில்மனுவில், 2015-18 ஆம் காலகட்டத்தில் சுமார் 4 லட்சம் ஆசிரியப் பட்டதாரிகள் படிப்பை நிறைவு செய்வர் என தெரிவித்துள்ளது. 4 லட்சம் பேர் ஆசிரியர் படிப்பை நிறைவு செய்யும்போது அவர்களில் எத்தனை பேருக்கு, எத்தனை ஆண்டுகளில் தமிழக அரசு வேலைவாய்ப்பை வழங்க தயாராக இருக்கிறது என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

குறைந்தது 5 ஆண்டுகளுக்குள் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமா? எனவே தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் எத்தனை ஆசிரியர் இடங்கள் காலியாகும்? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும்? என்ற விவரங்களை ஆண்டு வாரியாக தாக்கல் செய்ய வேண்டும். மேலும் இந்த 4 லட்சம் பேருக்கும் எத்தனை ஆண்டுகளில் வேலைவாய்ப்பை வழங்க முடியும் என்பது குறித்தும் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்டு 10 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close