மதுரை மாநகர் பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளை மேற்கொள்ள காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கடந்த ஜூலை 2 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை கடந்த 50 நாட்களில் மட்டும் மதுரை மாநகர் பகுதிகளில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 126 பேர் மாநகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 30 வயதிற்கு கீழுள்ள இளைஞர்கள் 100 பேரும் 30 வயதுக்கு மேற்பட்ட 16 பேரும் 8 சிறுவர்கள் என 50 நாட்களில் குற்ற வழக்குகளின் கீழ் 126 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 13 வழக்குகளும், கீரைத்துறை 9 வழக்குகளும், அவனியாபுரம் 10 வழக்குகளும், தெப்பக்குளம் 7 வழக்குகளும், செல்லூர் 6 வழக்குகளும், கூடல்புதூர் 6 வழக்குகளும், எஸ்.எஸ் காலனி 5 வழக்குகளும், மதிச்சியம், திலகர்திடல் , தெற்குவாசல் அண்ணாநகர், திடீர் நகர் , திருப்பரங்குன்றம் , மதிச்சியம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் தலா 3 வழக்குகளும், சுப்பிரமணியபுரம், மாட்டுத்தாவணி, கோ.புதூர் காவல் நிலையத்தில் தலா ஒரு வழக்கு என மாநகரில் உள்ள 18 காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 126 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறைகளில் அடைத்துள்ளனர்.
மதுரை மாநகர் பகுதிகளில் வழிப்பறி நோக்கத்தோடு வாளுடன் சுற்றி திரிந்ததாகவும் பல்வேறு கொலை கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் பழிக்கு பழியாக கொலை செய்வதற்காக திட்டமிட்டு வாள்களுடன் சுற்றி திரிந்ததும் , பழைய வழக்குகளின் செலவுகளுக்காக வாளுடன் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்து பணம் பறிக்க முயன்றதும் , கஞ்சா மற்றும் மது வாங்குவதற்காக பண தேவைக்காக பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பதற்காகவும் , கடைகளிலும் வணிகர்களை மிரட்டி மாமுல் கேட்பதற்காகவும், சிறுவர்கள் சிலர் தங்களை ரவுடியாக சித்தரிப்பதற்காக இதுபோன்று ஆயுதங்களுடன் சுற்றி திரிந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது
இந்த கைது நடவடிக்கைகளில் மதுரை மாநகரின் தொடர் கொலை சம்பவத்தில் தொடர்புடைய வி.கே குருசாமி மற்றும் வெள்ளைக்காளி தரப்பை சேர்ந்தவர்களும் வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாநகர் பகுதிகளில் கடந்த 50 நாட்களில் மற்றும் 126 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு மாநகர காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை சிறைச்சாலை மட்டுமின்றி விருதுநகர் திண்டுக்கல் உள்ளிட்ட சிறைச்சாலைகளுக்கு மாற்றம். மாநகர் பகுதி முழுவதிலும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு முன் வழக்குகள் தொடர்புடைய குற்றவாளிகள் தொடர்பான கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என மாநகர காவல்ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடதக்கது.
செய்தி: சக்தி சரவணக்குமார், மதுரை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“